ஒரு பதவி, ஓர் ஓய்வூதியம் - என்ன பிரச்சனை?

படத்தின் காப்புரிமை AFP

இந்தியாவில் ஓய்வு பெற்ற ராணுவத்தினர், ஒரு பதவி, ஓர் ஓய்வூதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வரும் நிலையில், சமீபத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப் பிரச்சனையை மீண்டும் ஆழமாக உற்றுநோக்க வைத்திருக்கிறது. இதுபற்றிய ஒரு பார்வை.

ஒரு பதவி, ஒர் ஓய்வூதியம் கோரிக்கை என்ன?

இந்தியாவில் ,ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பாக பல பதிற்றாண்டுகளாகப் போராடி வருகிறார்கள். தங்கள் ஓய்வூதியம், பணவீக்கத்தால் மிகச்சொற்பமான தொகையாக மாறிவிட்டதால், தங்கள் வாழ்க்கை ஒரு போராட்டக் களமாக மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். அன்றாடச் செலவுகள் அதிகரித்த நிலையில், தற்போது ஒரு ராணுவ வீரர் பெறும் ஓய்வூதியமும் தங்களது ஓய்வூதியமும் சமமாக இருக்க வேண்டும் என வாதிடுகின்றனர். உதாரணமாக, 1975-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஒரு ராணுவ வீரர் ஓய்வூதியமாக 2 ஆயிரம் ரூபாய் பெறும் நிலையில், 1985-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஒரு வீரர் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார்.

ஆனால், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், அவ்வப்போது கூடுதல் படிகளைப் பெறுகிறார்கள்?

அவர்கள் ஓய்வு பெறும் வயதின் அடிப்படையில் ஒவ்வொருவரின் படி மற்றும் அடிப்படை ஓய்வூதியம் மாறுபடுகிறது. ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஓய்வூதியம் என்றால், அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறும் வீரரின் அடிப்படை ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது.

ரு பதவி, ஓர் ஓய்வூதியத்தை அமல்படுத்துவதில் உள்ள தடைகள் என்ன?

முந்தைய அரசுகள் அல்லது அதிகாரிகள், ஊக்கத்தொகை வழங்குவதைப் பொறுத்தவரை, பாதுகாப்புப் படையினருக்கு குறைந்த முக்கியத்துவம் அளித்ததாக ஓய்வு பெற்ற ராணுவத்தினர் புகார் கூறுகிறார்கள். ஆனால், தொடர்ந்து வந்த அரசுகள் இந்தப் புகார்களை மறுத்துள்ளன. அரசுத்துறையின் ஒரு பகுதியினர் ஒரு பதவி ஓர் ஓய்வூதியம் கோரிக்கையை முன்வைத்தால், அரசின் மற்ற துறையினரும் அதே கோரிக்கையை முன்வைப்பார்கள். அப்படிப்பட்ட நிதிச்சுமையை அரசால் சமாளிக்க முடியாது என்பது வாதமாக உள்ளது.

ஒரு பதவி, ஓர் ஓய்வூதியம் திட்டம் அறிவிக்கப்பட்டது எப்போது?

பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு, நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு, ஒரு பதவி ஓர் ஓய்வூதியம் திட்டத்தை 2015-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி அறிவித்தது. ஆனால், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் சங்கங்கள் அல்லது குழுக்கள், இந்தத் திட்டத்தில் பல குறைகள் இருப்பதாகக் கூறி அதை ஏற்க மறுத்தன. தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட அவர்கள், பாதுகாப்பு சேவையின்போது தங்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களை அரசுக்கு திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தனர்.

படத்தின் காப்புரிமை AFP

அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு பதவி, ஓர் ஓய்வூதியம் மற்றும் அதை ஓய்வு பெற்ற ராணுவத்தினர் நிராகரிப்பது எந்த அடிப்படையில்?

•2013-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு, ஜூலை 1, 2014 - ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அரசு கூறுகிறது. ஆனால், 2015-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு, ஏப்ரல் 1, 2014-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற ராணுவத்தினர் கூறுகிறார்கள்.

•ஒரு பதவி ஓர் ஓய்வூதியத் திட்டத்தில் 30 லட்சம் ராணுவத்தினர் பயன்பெறுவார்கள் எனவும், நிலுவைத் தொகை 6 மாத இடைவெளியில் வழங்கப்படும் எனவும் அரசு கூறுகிறது. உயிரிழந்த ராணுவத்தினரின் மனைவிகளுக்கு நிலுவைத் தொகையை ஒரே தவணையில் வழங்கவும் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

•இதனால் அரசுக்கு 8 ஆயிரம் கோடி முதல் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் செலவாகும் எனவும், எதிர்காலத்தில் இது அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

•ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இத் திட்டத்தை மீளாய்வு செய்வதாக அரசு கூறுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடக்க வேண்டும் என்பது ராணுவத்தினரின் கோரிக்கை.

•விருப்ப ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு இத் திட்டம் பொருந்தாது என்று அரசு முதலில் கூறியது. ஆனால், ஓய்வுபெற்ற ராணுவத்தினர் இதை நிராகரித்தனர்.

•இதில் குறைபாடுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய, ஓர் உறுப்பினர் நீதிக்குழுவை அரசு நியமித்தது. அந்தக் குழுவின் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

முதல் கட்ட ஓய்வூதியத் தவணைத் தொகையை வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்தத் தொகை 5 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டுவதாகவும் சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.

ஆனால், தங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்து, அதை மறு அமலாக்கம் செய்ய வேண்டும் என ஓய்வு பெற்ற ராணுவத்தினர் வலியுறுத்துகிறார்கள்.

தொடர்புடைய தலைப்புகள்