என்.டி.டி.வி ஒளிபரப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு கருணாநிதி, வைகோ கண்டனம்

என்.டி.டி வி தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்திற்குத் தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தத் தடை ஊடக சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் இந்திய விமானப் படைத் தளத்திற்குள், 2-1-2016 அன்று தீவிரவாதிகள் திடீரென்று புகுந்து தாக்குதல் நடத்தினர். அந்த நிகழ்வினை என்.டி.டி.வியின் இந்தி சேனல் ஒளிபரப்பியதாக மத்திய பாரதிய ஜனதா அரசு குற்றம்சாட்டியதோடு, பத்து மாதங்களுக்குப் பிறகு, நவம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல், மறுநாள் பிற்பகல் 1 மணி வரை, என்.டி.டி.வி. இந்தி சேனலின் ஒளிபரப்புக்கு, 24 மணி நேரம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ' மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கையைப் பார்க்கும்போது, நெருக்கடி நிலை காலத்தில் கழக ஏடான "முரசொலி"க்கும், அதில் நான் எழுதிய கட்டுரைகளுக்கும் விதிக்கப்பட்ட தடை உத்தரவுதான் நினைவிற்கு வருகிறது. மத்திய பாஜக அரசின் செயல்பாடு கருத்துச் சுதந்திர மீறலாகும். மத்திய அரசு இப்படிப்பட்ட நடைமுறைகளைத் தொடருமானால், அது இரண்டாவது நெருக்கடி நிலைக்குத்தான் வழி வகுக்கும் என்பதோடு, அந்தக் கறுப்பு நாட்களைத்தான் இந்திய மக்களின் நெஞ்சில் நிரந்தரமாகச் செதுக்கி விடும்,'' என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இந்த விவகாரத்தில் பிரதமர் நேரடியாகத் தலையிட்டு, ஜனநாயக உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் இந்த ஆட்சியில் இனி எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை வெளியிட முன் வர வேண்டும் என்று கோரியுள்ளார்.

மதிமுக தலைவர் வைகோ, மோடி அரசு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதைப் பார்த்தால் இந்தியா ஜனநாயகப் பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறதா? என்ற ஐயப்பாடு எழுகிறது என்றும் கருத்துரிமைக்கு எதிராக என்.டி.டி.வி. இந்தியா செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு விதித்துள்ள ஒரு நாள் தடையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள வைகோ, ''இது தொலைக்காட்சி ஊடகங்கள் மீது மட்டும் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் அல்ல,ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீது தொடுத்துள்ள தாக்குதல் ஆகும். நெருக்கடி கால இருண்ட வரலாற்றை மீண்டும் நினைவூட்டுவது போன்ற மோடி அரசின் இந்நடவடிக்கை கடுமையான கண்டனத்துக்கு உரியது ஆகும்,'' என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், என் டி டி வி நிறுவனம், பதான்கோட் தாக்குதலை எல்லா தொலைக்காட்சிகளும் நேரலையாகவே ஒளிபரப்பின. அனைத்துப் பத்திரிகைகளும் அது குறித்து விரிவான தகவல்களை வெளியிட்டன. ஆனால் என்.டி.டி.வி. மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளது.

''உண்மையில், எங்கள் தொலைக்காட்சியின் ஒளி பரப்பு பாரபட்சமற்ற வகையில் இருந்தது. நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்த இருண்ட கால கட்டத்தில் பத்திரிகைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் பிறகு இப்போது என்.டி.டி.வி.க்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அசாதாரணமானது" என்று என் டி டி வி நிறுவனம் தனது இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளது.