பிறந்த குழந்தைக்கு தாய் பாலூட்டுவதை மத நம்பிக்கையை காரணம் காட்டி தடுத்த தந்தை கைது

பிறந்த குழந்தைக்கு தாய்ப் பாலூட்டக்கூடாது எனத் தாயை தடுத்தது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு இஸ்லாமிய மதகுருவும்,அந்தக் குழந்தையின் தந்தையும் கைதாகியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிறந்த குழந்தை ஐந்து முறை தொழுகையை கேட்ட பிறகுதான் அதற்குத் தாய் பால் கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு முன் பால் கொடுத்தால், தாயை 'தலாக்' என்று கூறி, இஸ்லாம் முறைப்படி விவாகரத்து செய்யவேண்டிவரும் என்று தந்தை அபூபக்கர் அச்சுறுத்தியதால், மருத்துவர்கள் அறிவுறுத்திய போதும் அந்தத் தாய் அதற்குச் செவிமடுக்கவில்லை என கேரள மாநில குழந்தைகள் உரிமை நல ஆணைய தலைவர் தெரிவித்தார்.

கடந்த புதனன்று நடந்த இந்தச் சம்பவத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் அறிவுறுத்திய போதும், அபூபக்கர் அதை ஏற்க மறுத்ததால், அந்தக் குழந்தைக்கு அடுத்த நாள் தான் பால் கொடுக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவரை, தந்தை சொன்னபடி தேனும், தண்ணீரும் தான் குழந்தைக்கு அளிக்கப்பட்டன.

இதுகுறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய ஆணைய தலைவர் சோபா கோஷி, ஆணையத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, தந்தை அபூபக்கர் மற்றும் மதகுரு ஹைத்ரொஸ் அலி தங்கல் சனிக்கிழமையன்று தமராசசேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர் என்றார். ''அபூபக்கர் தனது மதகுரு ஹைத்ரொஸ் அலி தங்கல் கூறியதைப் பின்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டுள்ளார். பல இஸ்லாமிய குடும்பங்களில், தண்ணீர் கொடுப்பதற்கு முன், குழந்தை ஒரு முறை தொழுகையை கேட்டால் போதும் என்ற சொல்லப்படுகிறது. ஆனால், இவ்வாறு குழந்தையை தாய்ப் பாலிற்காக காத்திருக்க வைத்தது இது தான் முதல் முறை,'' என்றார்.

அபூபக்கரும், மதகுரு ஹைத்ரொஸ் அலி தங்கலும் நீதிமன்றம் சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) சட்டம் 2015 என்ற சட்டத்தின் கீழ் எடுக்கும் நடவடிக்கைக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றார் கோஷி.