முதல்வர் வேட்பாளர் விவகாரம்: வைகோவின் கருத்துக்கு பதிலளிக்க பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது தவறுதான் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்க தேவையில்லை என விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை http://dmdkparty.com/
Image caption பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப் படம்)

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், வைகோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கருத்துத் தெரிவிக்க கூடியவர் என்றும், தேர்தல் சமயத்தில் கூட்டணிக்கு தேடி வந்தவரும் அவர்தான் என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே ,தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக, தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை வைத்தால் அதுகுறித்து பரிசலினை செய்யப்படும் என மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு விவகாரங்களில் முரண்பட்ட கருத்துக்களைக் கூறி அடிக்கடி சர்ச்சைகள் உருவாகி வரும் வேளையில், திருமாவளவனின் இந்தக் கருத்தும் எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ள மக்கள் நலக் கூட்டணி, இதுவரை எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.