சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என்று ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சபரிமலை கோயில் (கோப்புப் படம்)

முன்னதாக, கடந்த 2006-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில், சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 2007-ஆம் ஆண்டு, இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, அப்போதைய ஆளும் இடது சாரி முன்னணி அரசு சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

பின்னர் ஆட்சிக்கு வந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு சபரிமலை கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு தாங்கள் உடன்படுவதாக தெரிவித்தது. அதாவது, 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களை சபரிமலை கோயிலில் அனுமதிப்பதில்லை என்ற முந்தைய முடிவை பின்பற்றப் போவதாக தெரிவித்தது.

தற்போது 2016-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த இடது சாரி அரசு கடந்த ஜூன் மாதத்தில் இது தொடர்பாக ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில் முந்தைய ஜனநாயக முன்னணி அரசின் முடிவையே தங்கள் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கேரளாவின் தற்போதைய ஆளும் அரசான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, தங்களின் முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

மேலும், தாங்கள் ஜூன் மாதத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவை விலக்கிக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது. தங்களின் நிலைப்பாடு மாறியதற்கான காரணத்தை அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை.