கன்னட படப்பிடிப்பில் விபத்து: ஏரியில் மூழ்கி 2 ஸ்டண்ட் நடிகர்கள் பலி

இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றான பெங்களூருவில் இரண்டு சினிமா ஸ்டண்ட் நடிகர்கள் படப்பிடிப்பு ஒன்றின் போது ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை kashif masood
Image caption ஹெலிகாப்டரிலிருந்து இருவரும் உயிர் பாதுகாப்பு உடைகள் இன்றி ஏரியில் குதித்துள்ளனர்

கன்னடப் படம் ஒன்றின் படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அனில் வெர்மா மற்றும் ராகவ் உதய் ஹெலிகாப்டரிலிருந்து நீரில் குதித்தனர்.

அந்த இரண்டு பேருக்கும் நீந்த தெரியவில்லை என்றும் சரியான நேரத்திற்கு அவர்களை மீட்க முடியவில்லை என்றும் உள்ளூர் ஆய்வாளர், ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அலட்சியமாக செயல்பட்டதாக தயாரிப்பாளர்கள் மீது போலிஸார் குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

படப்பிடிப்பின் போது முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. உயிர் பாதுகாப்பு மிதவை உடைகள் கொடுக்கப்படவில்லை, மீட்புக் குழுக்கள், அவசர ஊர்தி சேவை என எதுவுமே இல்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

அதே படப்பிடிப்பில் கன்னட சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான துனியா விஜய் சண்டைப் பயிற்சியாளர்களுடன் சேர்ந்து நீரில் குதித்தார் ஆனால் அவர் எந்தவித காயங்களும் இன்றி கரை திரும்பி விட்டார்.