500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற காலை முதல் வங்கிகளில் கூட்டம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, இவற்றை மாற்றுவதற்காக நாடு முழுவதும் வங்கிகளில் மக்கள் குவிந்துவருகின்றனர்.

Image caption 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியில் குழுமியுள்ள மக்கள்

இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் ஆகியவற்றில் இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என அரசு அறிவித்திருக்கிறது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திடீரென செல்லாது என அறிவிக்கப்பட்டதால், நேற்று முழுவதும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

காலை முதலே வங்கிகளின் முன் மக்கள் கூட்டம்

இந்தியா முழுவதும் வங்கிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வங்கிகள் திறந்தவுடன் தங்கள் வசம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குவிந்துள்ளனர்.

சென்னையில் உள்ள பல வங்கிகளில் காலை 8 மணி முதலே நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்தனர்.

Image caption 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியில் குழுமியுள்ள மக்கள்

வங்கிகளில் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் குவியக்கூடும் என்பதால், காவல்துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. 3000 காவல்துறையினர் இது தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சென்னை நகர காவல்துறை தெரிவித்திருக்கிறது. மேலும் ஊர்க் காவல் படையினரும் இந்தச் சேவையில் பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றனர்.

வங்கிகளில் பணத்தை மாற்றும்போது, ஒருவர் 4000 ரூபாய் மதிப்புள்ள பணத்தை மட்டுமே ரொக்கமாகப் பெற முடியும். மீதமிருக்கும் பணம் அவரது கணக்கில் வரவு வைக்கப்படும்.

பணத்தை மாற்ற வங்கிகளில் படிவம் வழங்கப்படுகிறது

4000 ரூபாய்க்குக் குறைவான ரூபாய் நோட்டுகளை நாட்டின் எந்த ஒரு வங்கியிலும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், அதற்கு மேற்பட்ட ரூபாயை மாற்ற வேண்டுமானால், கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்றே மாற்ற வேண்டும்.

வங்கிகளில் பணத்தை மாற்றச் செல்லும்போது, வாடிக்கையாளர்கள் பணத்தை மாற்றுவதற்கென ஒரு படிவத்தை பூர்த்திசெய்து அளிக்க வேண்டும்.

பெருந்தொகையான பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதற்கு முறையான கணக்கு இல்லாத பட்சத்தில் 200 சதவீதம் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என நேற்று அரசு அறிவித்தது.

ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி போன்ற வங்கிகள் ஏடிஎம் கட்டணங்களை ரத்துசெய்வது போன்ற சலுகைகளை அறிவித்துள்ளன.

பாரத ஸ்டேட் வங்கி, இன்று மாலை 6 மணி வரை இயங்கும் என அறிவித்துள்ளது.

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் நாளை முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும். ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக 20000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். இந்தக் கட்டுப்பாடு சில நாட்களுக்கு நீடிக்கும்.

பொதுமக்கள் தங்களிடம் இருக்கும்500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ஆம் தேதிவரை எந்த வங்கிகளில் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என அரசு அறிவித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்