பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்காததால், மீண்டும் வங்கிகளை நாடும் பொதுமக்கள்

இந்தியா முழுவதும் இன்று தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் (ஏடிஎம்) செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பல இடங்களில் அவை செயல்படாததால், மக்கள் மீண்டும் வங்கிகளையே நாடிவருகின்றனர்.

Image caption சில நாட்களில் புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் விடப்படும் - ரிசர்வ் வங்கி

இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என செவ்வாய்க்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் புழக்கத்தில் உள்ள நோட்டுகளை வியாழக்கிழமை முதல் வங்கிக் கிளைகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் வெள்ளிக்கிழமை முதல் தங்கள் பண அட்டைகளைப் பயன்படுத்தி தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களில் பணத்தை எடுக்க முடியும் எனவும் அரசு அறிவித்திருந்தது.

இதனால், நேற்று வங்கிகளில் மக்கள் பணத்தை மாற்றுவதற்காகக் குவிந்தனர். இந்த நிலையில், இன்று அறிவிக்கப்பட்டதுபோல பெரும்பாலான ஏடிஎம் எந்திரங்கள் செயல்படவில்லை.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு நகரத்திலும் மிகச் சில ஏடிஎம் எந்திரங்களே செயல்பட்டன. அந்த எந்திரங்களில் இருந்து பணத்தை எடுக்க மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க நேர்ந்தது.

இதனால், நேற்றைப் போல வங்கிகளில் இருந்தே பணத்தை எடுப்பதற்காக மீண்டும் மக்கள் வங்கிகளை நாட ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக வங்கிக் கிளைகளில் மீண்டும் கூட்டம் காணப்படுகிறது.

ஏடிஎம் எந்திரங்களில் தற்போது 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கின்றன. 2000 ரூபாய் நோட்டை வழங்கும் வகையில் எந்திரங்களை மாற்ற சில நாட்கள் ஆகும் என்பதால் அதற்குப் பிறகே ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படுவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தின் காரணமாகவே, அவை இயங்கவில்லையென்றும் இன்று மாலைக்குள் பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்கும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் இன்னும் சில நாட்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என ரிசர்வ் வங்கியின் தென்மண்டல மேலாளர் சதக்கத்துல்லா தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்