முதலமைச்சருக்கான சிகிச்சை முடிந்துவிட்டது; வீடு திரும்புவது குறித்து அவரே முடிவெடுப்பார் - அப்போலோ மருத்துவமனை தலைவர் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா எந்த சிகிச்சைக்காக வந்தாரோ அந்த சிகிச்சை முடிந்துவிட்டது என்றும் எப்போது வீடு திரும்புவது என்பதை அவரே முடிவு செய்வார் என்றும் அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

விழா ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் சி ரெட்டி, முதல்வரின் நோய்த் தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும், தன் பணிகளை மேற்கொள்வதற்கான புத்துணர்ச்சியைப் பெறுவதற்காகவே அவர் மருத்துவமனையில் தொடர்ந்து இருந்து வருவதாகக் கூறினார்.

அவருக்கான சிகிச்சை முடிந்துவிட்டதாகவும் சாதாரண அறைக்கு மாற்றப்படுவது என்பது, வசதியைப் பொறுத்த விஷயம் மட்டுமே என்று பிரதாப் ரெட்டி கூறினார்.

தான் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் இனி மருத்துவமனை தேவையில்லை என எப்போது முதல்வர் நினைக்கிறாரோ அப்போது வீடுதிரும்புவார் என்றும் பிரதாப் ரெட்டி கூறினார்.

தற்போது வழக்கமான உணவுகளையே அவர் எடுத்துக்கொள்கிறார் என்றும் பிரதாப் ரெட்டி குறிப்பிட்டார்.