செல்லாத நோட்டுகள் அறிவிப்புக்கு முன்னர் அரசு எடுத்திருக்க வேண்டிய 5 நடவடிக்கைகள்

தற்போதைய ரூபாய் நோட்டு தட்டுப்பாடு மற்றும் குழப்பத்தால், சராசரி இந்தியப் பிரஜைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இப்பிரச்சனையில் அரசு எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகளாகக் கருதப்படும் 5 விஷயங்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம். பிபிசி இந்தி சேவையின் ஸுபேர் அஹமத் வழங்குகிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஏடிஎம்கள் வேலை செய்யாததால் பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் மக்கள்

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலோனோர், கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பை வரவேற்றாலும், இந்த நடவடிக்கையை அமல்படுத்த தேவையான முன்னேற்பாடுகளை அரசு செய்யவில்லை என்று அரசின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் முன்னர் குழுமும் நீண்ட வரிசைகளுக்கு காரணம், ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டினை சமாளிக்க அரசின் தரப்பில் முறையான திட்டமிடல் இல்லாததுதான் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கோவாவில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடு பிரச்சனை தீர்ந்து, நிலைமை சீராக கிட்டத்தட்ட 50 நாட்கள் வரை ஆகும் என்று கூறினார்.

இன்னும் மூன்று வாரங்களில் நிலைமை சீராகி விடும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லீ தெரிவித்தார்.

இந்த பிரச்சனை தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி , ''இதனை சமாளிக்க அரசு தயார் நிலையில் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக அறிவிப்பதற்கு முன்னர், அரசு செய்திருக்க வேண்டிய 5 நடவடிக்கைகள் என்னவென்பதை பொருளாதார நிபுணர்களும் , சாதாரண மக்களும் கூறுவது இவைதான்.

புதிதாக அறிமுகமாகும் நோட்டுகளை எடுக்கும் வகையில் ஏடிஎம்களை மாற்றியமைத்தல்

படத்தின் காப்புரிமை AP
Image caption புதிய 2000 ரூபாய நோட்டை எடுக்க ஏடிஎம்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்

இந்தியா முழுவதிலும் இரண்டு லட்சத்திற்கும் மேலான ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் உள்ளன. கடந்த நவம்பர் 8-ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்த பின்னர், பல ஏடிஎம்கள் செயலிழந்து விட்டன.

புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை இந்திய அரசு அச்சிட்டு, வெளியிட்டாலும், இதனை மக்கள் எடுக்கும் வண்ணம் ஏடிஎம்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். புதிய நோட்டுகளை எடுப்பதற்கு ஏடிஎம் எந்திரங்களில் புதிய தட்டுக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை செய்வதற்கு மூன்று வாரங்கள் வரை மட்டும் ஆகும் என்று அருண் ஜெட்லீ கூறியிருந்தாலும், ஏடிஎம்களை மாற்றியமைப்பதற்கு இரண்டு மாதங்களாவது ஆகும் என்று பிபிசியிடம், இது குறித்து கருத்து தெரிவித்த சில நிபுணர்கள் கூறியுள்ளனர்.

100 ரூபாய் நோட்டுகள் எளிதாக கிடைக்கும் வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை இந்திய பணச் சந்தையில் 85 சதவீதம் உள்ளது. இவற்றை தடை செய்த பிறகு, நாட்டில் உள்ள ரொக்கப் பணம் 15 சதவீதம் அளவிற்கு தான் உள்ளது, அதாவது, எஞ்சிய சிறிய மதிப்பிலான 100, 50, 20 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அரசு அறிவிப்பதற்கு முன்னரே, நாட்டில் உள்ள 100 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்ததாக அனைத்து இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

இப்போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் தடை அறிவிப்புக்கு பின்னர், 100 ரூபாய் நோட்டுகளின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த தட்டுப்பாட்டுக்கும், குழப்பத்திற்கும் ரிசர்வ் வாங்கியே பொறுப்பு என்று இந்த சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏடிஎம்களில் தற்போதுள்ள 100 ரூபாய் விநியோகம் செய்யும் தட்டுகள், அதிக மதிப்பிலான பணத்தை விநியோகம் செய்யும் தட்டுகளை விட அளவில் சிறியதாக உள்ளன. இந்த தட்டுகளுக்கு பதிலாக, அதிக அளவில் 100 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்யும் வகையில் புதிய பண விநியோக தட்டுகள் பொருத்தப்பட வேண்டும்.

நடமாடும் ஏடிஎம்கள் மற்றும் கிராமங்களில் வங்கி வசதிகள்

படத்தின் காப்புரிமை Reuters

500 மற்றும் 1000 ரூபாய் போன்ற அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை செல்லாதது என்று அறிவித்து தடை செய்வதற்கு முன்னர், தற்காலிக நடமாடும் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களை உருவாக்க அரசு ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று பல பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தனது கருத்தை தெரிவித்த பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி, செல்லாதது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் போது, அதனை மாற்றுவதற்கு அதனோடு ஒத்திசைவாக நாடெங்கும் பல தற்காலிக நிலையங்களை அதிகாரிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பணம் செலுத்த/பெற தனித்தனி வரிசைகளை அமைத்திருக்க வேண்டும்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பணம் எடுக்க வங்கிகளில் முன்னர் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன

இந்தப் பிரச்சனை தொடர்பாக பலரை பிபிசி கருத்து கேட்ட போது, பணத்தை வைப்பு செய்யவும், பணத்தை எடுக்கவும் தனித்தனி வரிசைகள் இருந்திருந்தால், தங்களின் சிரமங்கள் பெரிதும் குறைந்திருக்கும் என்றே தெரிவித்தனர்.

சில வங்கிகள் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தாலும், இவற்றை தயார் செய்ய குறைவான கால அளவையே அரசு தந்ததால், பெரும்பாலான வங்கிகளால் தனித்தனி வரிசைகளை ஏற்பாடு செய்ய முடியவில்லை.

ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் நலனை உத்தேசித்து தனித்தனி வரிசைகள் இருந்திருக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சில வங்கிகளில் இது போன்ற வசதிகள் இருந்தாலும், பெரும்பாலான வங்கிகளில் இந்த வசதிகள் இல்லை.

வங்கிகளின் பணி நேரத்தை அதிகரித்திருக்க வேண்டும்

Image caption 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியில் குழுமியுள்ள மக்கள்

கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகள் திறக்கப்பட்டு, அங்கு பணி நடந்ததை மக்கள் வரவேற்றனர்.

ஆனால், தங்கள் பணியால் வார நாட்களில் வங்கிகளுக்கு செல்ல நேரம் கிடைக்காத பலர், குறிப்பாக அலுவலகம் செல்பவர்கள், வங்கிகளின் பணி நேரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்