புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சிறுபான்மையினர் ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக இன்று (வியாழக்கிழமை) அரசியல் கட்சிகளின் ஆதரவோடு சிறுபான்மையினர் புது டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சி அறிமுகப்படுத்தயிருக்கும் இந்த புதிய கல்வி கொள்கை, மக்களுக்கு எதிரானது என்று கூறி இந்தியா முழுவதுமுள்ள சிறுபான்மையினர் ஒருங்கிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டெல்லியின் துணை முதல்வர் மனிஷ் சிசோதியா, இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்ய சபை நாடாளுமன்ற உறுப்பினர் திக்விஜய் சிங், இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யச்சூரி, தமிழ் நாட்டின் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலரும் தங்களுடைய ஆதவை தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆம் ஆத்மி, காங்கிரஸ், திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், திராவிட கழகம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்த கல்வி கொள்கையால், கல்வியில் வகுப்புவாதம், வணிகமயம் மற்றும் மத்தியில் அதிகாரம் குவிக்கப்படும் நிலைமை ஏற்படும் என்பதால் இதனை எதிர்ப்பதாக இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்திருக்கும் சிறுபான்மையினர் அமைப்பின் தலைவர் விக்டர்தாஸ் தெரிவித்திருக்கிறார்.

சமஸ்கிருதத்தை உட்புகுத்துவதாலும், யோகாவை கட்டாயமாக்குவதுதாலும் மத்திய அரசின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு கல்வி துறை மாறிவிடும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

கல்வியை வணிகமயமாக்கினால், தலித்துகள், பழங்குடியினர், மலைவாழ் மக்கள் அதிக பாதிப்படைவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மாறிக்கொண்டிருக்கும் உலக நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்தியாவின் மாணவர்களுக்கு தேவையான திறமைகளையும், அறிவையும் வழங்கும் நோக்கில் கல்வி, புத்தாக்கம், ஆய்வு ஆகியவற்றின் தரத்தை அதிகரிப்பதற்கு தேசிய அளவிலான இந்த புதிய கல்வி கொள்கை உதவும் என்று இந்திய அரசு கூறுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்