தமிழ்நாடு, புதுச்சேரி இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்புத் தொகுதியிலும் நடக்கும் தேர்தல்களில் காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் விநியோகிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சீனிவேல், பதவியேற்பதற்கு முன்பாகவே மரணமடைந்ததால், அந்தத் தொகுதி காலியாக இருந்தது.

புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்புத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ததால் அந்தத் தொகுதியும் காலியானது.

இந்த நான்கு தொகுதிகளுக்கும் நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

தஞ்சாவூர் தொகுதியில் 14 பேரும் அரவக்குறிச்சியில் 39 வேட்பாளர்களும் திருப்பரங்குன்றம் தொகுதியில் 28 வேட்பாளர்களும் நெல்லித்தோப்பு தொகுதியில் 8 பேரும் போட்டியிடுகின்றனர்.

இந்த இடைத்தேர்தல் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 9 மணி நிலவரப்படி, அரவக்குறிச்சி தொகுதியில் 21 சதவீத வாக்குகளும் தஞ்சாவூரில் 15 சதவீத வாக்குகளும் திருப்பரங்குன்றத்தில் 17 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.