ரூபாய் நோட்டு விவகாரம்: தி.மு.க. மனிதச் சங்கிலி போராட்டம் அறிவிப்பு

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 24ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி அறிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தப் பிரச்சனையின் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சாதாரண மக்கள் துன்பமடைந்து வருவதாகவும் வேலைக்குச் செல்லாமல் தங்களிடமிருக்கும் பழைய பணத்தை மாற்ற வரிசையில் நிற்பதாகவும் கருணாநிதி கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இது தொடர்பாக எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் மோதி பதிலளிப்பதில்லையென்றும் மற்ற மாநில அரசுகள் மத்திய அரசைக் கண்டித்து கடுமையாக குரல் எழுப்பிவரும் நிலையில், தமிழக அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றும் கருணாநிதி குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரி, நவம்பர் 24ஆம் தேதியன்று மாலை 4 மணி முதல் 5 மணிவரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக மு. கருணாநிதி அறிவித்திருக்கிறார்.