எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி விவகாரம்: மதன் கைது

மருத்துவக் கல்லூரியில் இடங்களைப் பெற்றுத்தருவதாகக்கூறி, மோசடி செய்த குற்றச்சாட்டில் "வேந்தர் மூவிஸ்" மதன் சென்னை நகரக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். திருப்பூர் நகரில் அவரைக் கைதுசெய்திருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Image caption தனிப்படையிருக்கு பாராட்டு தெரிவிக்கும் ஆணையர் ஜார்ஜ்

சென்னையில் வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த மதன், கடந்த ஜூன் மாதம் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டுக் காணாமல் போனார்.

இதற்குப் பிறகு அவர் மீது பலரும் பண மோசடி புகார்களைக் கூறினர். சென்னைக்கு அருகில் செயல்பட்டுவரும் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை இடங்களைப் பெற்றுத்தருவதாகக் கூறிவிட்டு அவர் மாயமானதாக புகார் கூறப்பட்டது.

தொடர்புடைய செய்தியை படிக்க கீழுள்ள தலைப்பில் கிளிக் செய்யவும்

எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்து கைது

குறிப்பாக ஜெயச்சந்திரன் என்ற மருத்துவர், தன்னுடைய மகனுக்கு எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இடத்தைப் பெறுவதற்காக 53 லட்ச ரூபாயை "கேபிடேஷன்" தொகையாகக் கொடுத்ததாகவும் ஆனால், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்தார்.

மதனின் தாயாரும் தன் மகனைத் தேடிக்கண்டுபிடித்துத் தர வேண்டுமென ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.

எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை இடங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, மதன் 123 நபர்களிடமிருந்து 84.27 கோடி ரூபாயை மோசடி செய்திருப்பதாகக் காவல்துறை கூறுகிறது.

இந்த வழக்கில் முன்னதாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து கைதுசெய்யப்பட்டார். மேலும் இந்திய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பார்கவன் பச்சமுத்து, சண்முகம், பாபு உள்ள ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

தான் ரிஷிகேஷில் கங்கையில் மூழ்கி மரணமடையப் போவதாக மதன் தனது கடிதத்தில் கூறியிருந்ததால், வாரணாசி, ரிஷிகேஷ், ஹரித்வார் உள்ளிட்ட இடங்களில் காவல்துறை தனிப்படை அமைத்து அவரைத் தேடிவந்தது.

அவர் உத்தராகண்ட், மணிப்பூர், கர்நாடக மாநிலங்களில் தங்கியிருந்தை காவல்துறை தனிப்படைக் கண்டுபிடித்தது. மேலும் உத்தராகண்ட் மாநிலத்தில் மதன் சொத்துக்களை வாங்கியிருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.

இந்த நிலையில், மணிப்பூரிலிருந்து சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு திரும்பிய மதன், திருப்பூரில் தங்கியிருந்ததாகவும் ஒரு பெண்ணைச் சந்திப்பதற்காக இன்று காலையில் அவர் வெளியில் வருவார் என்று கிடைத்த தகவலை அடுத்து, அங்கு காத்திருந்த காவல்துறையினர் மதனை கைது செய்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்