இடைத்தேர்தல்: தமிழகத்தில் அதிமுக முன்னிலை, புதுவையில் காங்., முன்னிலை

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் நடந்த இடைத்தேர்தல்களின் முன்னணி நிலவரங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

Image caption கோப்புப் படம்

அதன்படி, தமிழகத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

தஞ்சாவூர் தொகுதியில் மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அதிமுக-வின் எம் ரெங்கசாமி, 17399 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி, 11470 வாக்குகளைப் பெற்று பின்தங்கியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில், அதிமுகவின் ஏ.கே. போஸ், 14401 வாக்குகளையும் திமுகவைச் சேர்ந்த பி. சரவணன் 10398 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை தாமதமாகத் துவங்கிய அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி 5340 வாக்குகளையும், திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி 3485 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

புதுச்சேரியின் நெல்லித்தோப்புத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 18709 வாக்குகளையும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் ஓம்சக்தி சேகர் 7526 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னதாக, கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர் சீனிவேல் காலமானதால் அங்கும் இடைத்தேர்தல் நடந்துள்ளது.

அதே போல், புதுவை நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் . ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ததால், அங்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதனால், தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்புத் தொகுதியிலும் கடந்த 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

தொடர்புடைய தலைப்புகள்