ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு தமிழகத் தலைவர்கள் இரங்கல்

மறைந்த கியூபத் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு தமிழக அரசியல் தலைவர்களான மு.கருணாநிதி, வைகோ உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மறைந்த கியூபத் தலைவர் காஸ்ட்ரோவுக்கு தமிழகத் தலைவர்கள் இரங்கல்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஒரு சின்னஞ்சிறிய நாட்டில் சிங்கக் குட்டியாக உலவி பெருமைக் குரிய புரட்சித் தலைவனாக வளர்ந்த பிடல் காஸ்ட்ரோ நான் மறக்க முடியாத மாவீரர்களில் ஒருவர்" என கருணாநிதி கூறியிருக்கிறார்.

மேலும் 2006ல் தான் எழுதிய கவிதை ஒன்றையும் அவர் நினைவுகூர்ந்திருக்கிறார்.

ஒரு புரட்சியாளனின் வாழ்வில் -- முக்கிய நாட்கள்

"அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு 80 கல் தொலைவில் இருந்துகொண்டே எதற்கும் அடிபணியாத துணிச்சல்காரராக கியூப அரசை வழிநடத்தினார். புரட்சிகரமான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அமெரிக்க நிறுவனங்களை ஒழித்துக்கட்டினார். வரலாற்றின் புகழில் இருந்து ஒருபோதும் ஃபிடல் காஸ்ட்ரோவை விடுவிக்க முடியாது" என ம.தி.முக. பொதுச் செயலாளர் வைகோ கூறியிருக்கிறார்.

கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்

"கியூபா நாட்டில் பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும், அவர் ஒருபோதும் பணக்காரராக வாழவில்லை; பணக்காரர்களுக்காகவும் வாழவில்லை. மாறாக பாட்டாளி மக்களுக்காக பாட்டாளியாகவே வாழ்ந்தவர். கியூபாவில் ஒற்றை ஆட்சி முறையை அறிமுகம் செய்ததற்காக காஸ்ட்ரோவை சர்வாதிகாரி என்று சிலர் விமர்சித்தாலும் அவர் எப்போதுமே மக்களின் குரல்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்தவர். இல்லாவிட்டால் இறப்புக்கு பிறகும் மக்களால் போற்றப்படும் தலைவராக திகழ்ந்திருக்க முடியாது" என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

"அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடரியை மிதித்தவர் காஸ்ட்ரோ. அவருடைய இழப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுக்கு பெரும் இழப்பு" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார்.