மும்பை மசூதியில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பெண்கள் நுழைய அனுமதி

மும்பையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஹாஜி அலி மசூதியின் உள்கருவறையில் பெண்கள் நுழைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பெண்கள் உள்ளே நுழையக் கூடாது என்று கூறும் ஆண் மதகுருக்கள் மதத்தின் பெயரில் ஆணாதிக்கத்தை காட்டுகின்றனர் என பிரச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் தெரிவிக்கின்றனர்

மசூதியின் உள் கருவறையில் பெண்கள் நுழையக்கூடாது என்று அந்த சூஃபி மசூதியை நடத்தும் அறக்கட்டளையால் தடுக்கப்பட்டிருந்தது.

சுமார் 100 பெண்கள் உள்ளே நுழைந்தனர் என்றும் அதில் பலர் பிராத்தனையில் ஈடுபடவே சென்றனர் என்றும் அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோளன் அமைப்பைச் சேர்ந்த சகியா சோமன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அந்த தடை "அரசியலமைப்பை மீறுவதாகவும்" பெண்கள் மீது பாரபட்சம் காட்டுவது போலவும் உள்ளது என மும்பை நீதிமன்றம் ஆகஸ்டு மாதம் தெரிவித்தது.

முதலில் அந்த அறக்கட்டளை உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது; பின்பு கடந்த மாதம் தடையை ரத்து செய்ய ஒப்புக் கொண்டது.

சமீப மாதங்களில் பெண்களுக்கு அனுமதி வழங்க மறுக்கும் கோவில்களில் பெண்களை அனுமதிக்குமாறு பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னர் ஹாஜி அலி மசூதியின் உள்ளே பெண்கள் அனுமதிக்கப்பட்டாலும், 2012ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையால் அவர்கள் சூஃபி துறவி ஒருவரது சமாதி இருக்கும் உள்கருவறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட வில்லை.

அந்த அறக்கட்டளை ஆண் துறவியின் கல்லறையை பெண்கள் தொட அனுமதிப்பது "பாவம்" என தெரிவித்திருந்தது.