தமிழகத்தை நெருங்கும் 'நாடா' புயல்- டிசம்பர் 2 கரை கடக்கலாம்

தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் உருவான வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை 8.30 மணியளவில் புயலாக உருவெடுத்துள்ளதாகவும் இது டிசம்பர் 2ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்குமென சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. இந்தப் புயலுக்கு நாடா எனப் பெயர்சூட்டப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு தென்கிழக்கில் சுமார் 730 கிலோ மீட்டர் தொலைவில் இந்தப் புயல் நிலை கொண்டிருக்கிறது.

இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2ஆம் தேதியன்று அதிகாலை வேதாரண்யம் மற்றும் புதுச்சேரி இடையில் கடலூருக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அனேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

படிப்படியாக இந்த மழை அதிகரித்து தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழைபெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையோ மிக கன மழையோ பெய்யக்கூடும்.

சென்னையில் நாளை அதிகாலை முதல் மழைபெய்யத் துவங்கி, படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும்.

2004ஆம் ஆண்டில் புயல்களுக்குப் பெயரிட ஆரம்பித்த பிறகு, இது 45வது புயல் என வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.