திருச்சி அருகே வெடி மருந்து ஆலையில் விபத்து: பலர் பலி?

திருச்சியில் உள்ள தனியார் வெடிமருந்துத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Image caption விபத்து நடந்த வெடிமருந்துத் தொழிற்சாலை

திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்திற்கு அருகே உள்ள முருங்கப்பட்டியில் அமைந்திருக்கும் தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

அப்போது சுமார் 30 பேர் பணியில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த ஒருவரது உடல் மீட்கப்பட்டிருக்கிறது. நான்கு பேர் வெளியேறிவிட்டனர்.

20க்-கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியிருப்பதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த வெடிவிபத்து ஏற்பட்டபோது பெரும் சத்தம் ஏற்பட்டதாகவும் நிலம் அதிர்ந்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். பெரும் புகைமூட்டம் நிலவுவதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.