வலுவிழக்கிறது நாடா புயல்

படத்தின் காப்புரிமை IMD
Image caption இந்திய நேரப்படி, வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு, செயற்கைக் கோள் புகைப்படம்

வங்கக் கடல் பகுதியில் தோன்றியுள்ள நாடா புயல் வலுவிழந்துவருவதாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை கரையைக் கடக்குமென்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

நாடா புயல் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில், வங்கக் கடலின் தென்மேற்கு திசையில் நிலை கொண்டிருக்கும் நடா புயல், மணிக்கு 22 கி.மீ வேகத்தில் மேற்கு தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, சென்னைக்குத் தென்கிழக்கில் 330 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த 12 மணி நேரத்தில் இந்த புயல் சின்னமானது, மேற்கு - தென்மேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வேதாரண்யத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையில் கடலூருக்குத் தெற்கில் டிசம்பர் 2-ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த புயலின் காரணமாக, தற்போது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் சில உள் மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படுவதோடு, லேசான மழையும் பெய்தது.

தமிழ்நாடு புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புயல் எச்சரிக்கையின் காரணமாக, ஏற்கனவே ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்