ரூ.500, 1000 செல்லாது என்ற அறிவிப்பால், திருத்தணி முருகன் கோயிலில் இ-உண்டியல்

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து, பக்தர்கள் தங்கள்டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் உண்டியலில் பணம் செலுத்தும் இ-உண்டியல் வசதி, தமிழகத்தில் திருத்தணி முருகன் கோயிலில் தொடங்கப்பட்டுள்ளது.

Image caption திருத்தணி முருகன் கோவிலில் இ-உண்டியலில் பணம் செலுத்தும் பக்தர்

கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவது போலவே, பக்தர்கள் தங்களது காணிக்கையைச் செலுத்த ஸ்வைப் செய்யும் இயந்திரத்தில் தாங்கள் விரும்பும் அளவில் பணத்தை செலுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை TNHRCE

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய திருத்தணி முருகன் கோயில் நிர்வாக அதிகாரி சிவாஜி, ''பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்ற காரணத்தால் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளோம். மக்களுக்கும் இந்த இ-உண்டியல் மீது நம்பிக்கை வந்துள்ளது. இந்த பணம் திருத்தணி முருகனின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்,'' என்றார்.

திருத்தணி கோயிலில், பக்தர்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தது 80 லட்சம் ரூபாய் வரை உண்டியலில் காணிக்கை செலுத்துவதாகத் தெரிவித்த அதிகாரி, ''ஸ்ரீரங்கம் கோயிலில் இந்த வசதி உள்ளது என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். தற்போதைய சூழ்நிலையில், பக்தர்களுக்கு காணிக்கை செலுத்த இந்த வசதி அவசியம் என்பதை அறிந்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் உதவியுடன், உடனடியாக அறிமுகப்படுத்தியுள்ளோம்,'' என்றார்.

டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டவுடன் இ-உண்டியலில் ஒரு பக்தர் ரூ.5,000தை செலுத்தியதாகவும், இந்த வசதி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் நிர்வாக அதிகாரி சிவாஜி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.