'பிசியோதெரபி சிகிச்சை முடிந்தவுடன் ஜெயலலிதா வீடு திரும்புவார்'

உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலன் பெற்றுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஃபிசியோதெரபி முடிந்தவுடன் ஜெயலலிதா வீடு திரும்புவார்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், ஜெயலலிதா நன்கு பேசுமளவுக்கும், தானாகவே உணவருந்தும் அளவுக்கும் குணமடைந்திருப்பதாக அவர் கூறினார்.

அதிகாரிகளுக்கு ஆட்சி தொடர்பாக உத்தரவுகளைப் பிறப்பிப்பதிலும் அரசியல் ரீதியான முடிவுகளை எடுப்பதிலும் முதல்வர் தற்போது ஈடுபட்டுவருவதாக பொன்னையன் தெரிவித்திருக்கிறார்.

60 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்ததால், தற்போது சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று ஃபிசியோதெரபி நிபுணர்கள் ஜெயலலிதாவுக்கு நடப்பதற்கான பயிற்சிகளை அளித்து வருவதாக பொன்னையன் மேலும் கூறினார்.

அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஜெயலலிதாவை நேற்று வந்து பரிசோதித்ததாகவும், அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார் என்பதை அவர்களும் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் பொன்னையன் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் உடற்பயிற்சி முடிந்தவுடன் அவர் வீடு திரும்புவார் என பொன்னையன் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். நீர்ச்சத்துக் குறைவு மற்றும் காய்ச்சல் காரணமாக அவர் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக முதலில் கூறப்பட்டது. பிறகு, அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்