பிரதமர் மோதியால் பாராட்டப்பட்ட பொறியாளர் போலி 2,000 ரூபாய் நோட்டு அச்சடித்து கைது

"மேக் இன் இந்தியா" திட்டத்தில் மேற்கொண்ட சிறந்த பணிக்கும், புதிய படைபாற்றலுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் புகழப்பட்ட இளம் பொறியாளர் அபிநவ் வர்மா, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 2,000 ரூபாய் போன்று போலி நோட்டுகளை அச்சிட்டதாக வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை PUNJAB POLICE

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 42 லட்சம் போலி 2000 ரூபாய் நோட்டுக்களுடன் அபிநவ் வர்மா அந்த மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தியாவின் 30 சதவீத தரகு கட்டணம் பெற்று கொண்டு, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2,000 ரூபாய் போலி நோட்டுக்களை வழங்கி கொண்டிருந்த அபிநவ் வர்மா, அவருடைய சகோதரி விஷாகா வர்மாவோடும், லுதியானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வீட்டுமனை வியாபாரி சுமான் நாக்பாலோடும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அபிநவ் வர்மா பயன்படுத்திய புதிய சொகுசு ஆடி காரில் இருந்த போலி 2,000 ரூபாய் நேட்டுக்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மிக முக்கிய அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கும் சிவப்பு சுழல் விளக்கு அந்த காரில் பொருத்தப்பட்டிருந்தது என்றும் மொஹாலி போலிஸ் துணை கண்காணிப்பாளர் பார்மின்தர் சிங் தெரிவித்திருக்கிறார்,

படத்தின் காப்புரிமை ABHINAV VERMA FACEBOOK

அபிநவ் வர்மாவின் "லிவ் பிரைய்லி" என்கிற சண்டிகர் அலுவலகத்தில் இந்த நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்சாபில் போலி புதிய ரூபாய் நோட்டுக்கள் பரவி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, அதில் தொடர்புடையோரை கைது செய்ய காவல்துறை நடத்திய சோதனைகளில் இருந்து தப்பித்து வந்த இந்த குழு, நோட்டுக்களை மாற்றுவதில் தரகு தொகை பெற்ற பிறகும் போலியான நோட்டுக்களை கொடுத்து மக்களை ஏமாற்றியிருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை PUNJAB POLICE

கைது செய்யப்பட்டிருக்கும் அபிநவ் வர்மா, "மேக் இன் இந்தியா" திட்டத்தில் தன்னுடைய சிறந்த பணிக்கும், புதிய படைப்பாற்றலுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டை பெற்ற பொறியாளர் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பார்வையற்றோர் பயன்படுத்தும் குச்சிகளில் பொருத்தப்படும் உணர்வலை கருவிகளை (சென்ஸார்) தயாரிக்கும் பொறியியல் பட்டதாரிதான் அபிநவ் வர்மா.

பார்வையற்றவர், இந்த கருவியை நடந்து செல்கின்ற பாதையை நோக்கியவாறு அணிந்திருக்க வேண்டும். அந்த வழியில் இருக்கின்ற தடைகளை இந்த கருவி பார்வையற்றவருக்கு தெரிவித்து எவ்வித தடையுமின்றி செல்ல உதவுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்