மூன்றாவது முறையாக தமிழக முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம்

ஓ. பன்னீர் செல்வம், தமிழக முதலமைச்சராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ளார்.

Image caption ஓ. பன்னீர் செல்வம்

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப்பட்ட ஓ. பன்னீர் செல்வம், இதற்கு முன்பு இரண்டு முறை இடைக்கால முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

கடந்த 1951-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பிறந்த அவர், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர். மனைவி மற்றும் மூன்று குழந்தைகள உள்ளனர். விவசாயம் செய்து வந்த அவர், தேநீர் கடையும் நடத்தி வந்தார். 1996 முதல் 2001- வரை பெரியகுளம் நகராட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.

பிறகு, 2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002-ஆம் ஆண்டில் பொதுப்பணித்துறை அமைச்சரானார். 2006-ல் அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தார்.

அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியில், நிதியமைச்சராகப் பதவி வகித்தார். அதிமுகவின் முக்கிய வாக்கு வங்கியான தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பன்னீர் செல்வத்துக்கு அந்த வாய்ப்புக்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

2001-ம் ஆண்டு வருவாய் அமைச்சராக இருந்தபோது, முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, டான்சி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டதால், பன்னீர் செல்வத்தை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தார் ஜெயலலிதா. 20010-ஆம் ஆண்டில் செப்ட்பர் முதல் 2002-ல் மார்ச் மாதம் வரை அவர் இப் பதவியில் இருந்தார். 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றார்.

அதன்பிறகு, அளவுக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில், தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2014-ஆம் ஆண்டு செப்டம்பர், இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சர் பொறுப்பை பன்னீர் செல்வத்திடம் ஒப்படைத்தார்.

தற்போது, தமிழகத்தின் 27-ஆவது முதலமைச்சராக, மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ளார் பன்னீர் செல்வம். இவர், போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்