காவல் துறையினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப தமிழக டிஜிபி உத்தரவு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்கும் மாரடைப்பு காரணமாக, திங்கள்கிழமை காலை ஏழு மணிக்கு அனைத்து காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் பணிக்கு ஆஜராகுமாறு தமிழ்நாடு மாநில காவல்துறை தலைவர் ஆணையிட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/Getty Images

மாநில உளவு துறை, பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையின் கூடுதல் காவல்துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியில், இந்த துறைகள் அனைத்தும் தங்களுடைய காவல்துறை துணை கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளையும், செயலாக்க நிலையிலுள்ள காவல்துறையினர் அனைவரையும் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு பணியில் ஆஜராக வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

சீருடையுடனும், சட்ட ஒழுங்கிற்கான வாகனங்களுடனும் பணியில் ஈடுபடும் அனைவரும் மறு ஆணை வரும் வரை பணியில் தொடர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.

நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்கெனவே பலப்படுத்தப்பட்டுள்ளது.

நோய் தொற்று காரணமாக செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் சென்னை கிரிம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, டிசம்பர் 4 ஆம் தேதி மாலை மாரடைப்பு ஏற்பட்டதால், அவருக்கு தீவிர கிசிசை அளிக்கப்பட்டு வருகிறது.