ஜெ., உடலுக்கு மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி

சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் உடலுக்கு திமுக பொருளாளர் மற்றும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

டிசம்பர் 5-ஆம் தேதியன்று (திங்கள் கிழமை) காலமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் ராஜாஜி அரங்கத்திற்கு காலையி்லிருந்து பொது மக்களும், தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

"ஆளுமைத் திறன் மிக்கவர் ஜெயலலிதா. அவரை இழந்து வாடும் அவரின் கட்சியினருக்கும் தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என ஜெயலலிதாவின் உடலிற்கு அஞ்சலி செலுத்திய பிறகு பத்திரிக்கையாளர்களிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர்கள் வெங்கய நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதிய தமிழகம் கட்சி செயலர் கிருஷ்ணசாமி, ஆகியோர் ஜெயலலிதாவின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, திரைப்பட பாடகி சுசீலா, நடிகர் சங்க தலைவர் நாசர் உள்பட பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய தலைப்புகள்