தொலையுணர் செயற்கைக்கோள் ரிசோர்ஸ்சாட் - 2ஏ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

இந்தியாவின் தொலையுணர் செயற்கைக்கோளான ரிசோர்ஸ்சாட் - 2ஏ வெற்றிகரமாக இன்று (புதன்கிழமை)காலையில் விண்ணில் ஏவப்பட்டது.

படத்தின் காப்புரிமை iSRO
Image caption வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து, இன்று (புதன்கிழமை) காலை 10.25 மணிக்கு பிஎஸ்எல்வி - சி 36 ராக்கெட்டின் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

இதற்கான கவுன்ட் டவுன் கடந்த திங்கட்கிழமை இரவு 10.25 மணிக்குத் தொடங்கியது.

தற்போது ஏவப்பட்டிருக்கும் ரிசோர்ஸ்சாட் செயற்கைக்கோளின் எடை 1235 கிலோவாகும்.

ராக்கெட் ஏவப்பட்டதிலிருந்து 18 நிமிடங்களில் பூமியிலிருந்து 822 கிலோ மீட்டர் தூரத்தில் செயற்கைக் கோள் அதன் சுற்றுப்பாதையில் தள்ளப்பட்டது. இந்த முறை ராக்கெட்டில் ஒரு கேமரா பொருத்தப்பட்டு செயற்கைக் கோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து செல்லும் காட்சியையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டனர்.

ஏற்கனவே இந்தியாவால் செலுத்தப்பட்டுள்ள ரிசோர்ஸ்சாட் 1, ரிசோர்ஸ்சாட் -2 ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இந்த செயற்கைக்கோள் செயல்படும்.

இந்த ரிசோர்ஸ்சாட் செயற்கைக்கோள்கள் புவியைத் தொடர்ந்து படம் எடுப்பதன் மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபடும்.

இஸ்ரோவின் மிகப் பிரபலமான பிஎஸ்எல்வி ராக்கெட் இதுவரை 38 முறை ஏவப்பட்டிருக்கிறது. அதில் 36 முறை வெற்றி கிடைத்திருக்கிறது.

1994-2016 காலகட்டத்தில் பிஎஸ்எல்வி மூலம் 121 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டிருக்கின்றன. இவற்றில், 79 செயற்கைக்கோள்கள் வெளிநாட்டினருக்காக ஏவப்பட்டவை. 42 செயற்கைக்கோள்கள் இந்தியாவுக்கு சொந்தமானவை.

தொடர்புடைய தலைப்புகள்