ஜல்லிக்கட்டு வழக்கில் விசாரணை முடிந்தது: தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்தது. இதன் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை JSURESH
Image caption கோப்பு படம்

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி தந்ததை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கினை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் நாரிமன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக, தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 2014-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பின்னர், தமிழக அரசின் வற்புறுத்தலால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு ஒரு அறிவிக்கை வெளியிட்டது.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நலவாரிய கூட்டமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஏற்று இந்தாண்டு தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

படத்தின் காப்புரிமை JSURESH
Image caption ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

இன்று நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணையில் அரசின் சார்பாக ஆஜரான அரசு முதன்மை வழக்கறிஞர் நரசிம்மா, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டுமென்றும், ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒரு தனி நிகழ்வாக பார்க்கக் கூடாது என்றும் வாதிட்டார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து சங்க காலத்திலிருந்தே குறிப்புகள் இருக்கின்றன என்றும், இவை மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையே நிலவிய தொடர்புகளைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்ட மூத்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென்றும், இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசு அல்லது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு அனுமதியளித்து, பின்னர் இப்போட்டிகளை தொடர்ந்து நடத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார்.

ஆனால், தடை விதிக்கப்பட்டதற்கு முன்னர் இருந்த சூழல்களும், காரணங்களும் தற்போதும் நிலவுவதால், ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கக் கூடாது என்று விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இவ்வழக்கில் விசாரணை தற்போது முடிவடைந்துள்ள சூழலில், தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்