சசிகலா அதிமுக தலைமைப் பதவிக்கு வந்தால் என்ன ஆகும்? - என். ராம் பேட்டி

படத்தின் காப்புரிமை Getty Images

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக தலைமைப் பதவியைக் கைப்பற்ற நினைத்தால் கட்சி பலவீனமாகிவிடும் என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவு குறித்து மேலும் படிக்க:ஜெ மறைவு: அசாதாரண வேகத்தில் நடந்த ஆட்சி மாற்றம் எழுப்பும் கேள்விகள்

இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், இனிமேல் கூட்டுத் தலைமை மூலம்தான் கட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

சமமான அந்தஸ்து உள்ளவர்கள் வரிசையில் ஓ.பி.எஸ். முதன்மையாக இருக்கிறார் என்ற நிலையில் அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலர் பதவியை அடைய நினைத்தால் எதிர்ப்பு இருக்கும். அதனால், தவறான திசையில் சென்று, அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால் கட்டாயமாக அந்தக் கட்சி பலவீனமாகிவிடும். எல்லா தரப்பினரும் சசிகலா தலைமையை ஏற்க மாட்டார்கள் என்றார் ராம்.

தனக்குத் தாய் இல்லாத குறையைப் போக்கும் வகையில், சசிகலா தன்னை ஒரு சகோதரியாகப் பார்த்துக் கொள்கிறார் என்று பலமுறை ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். ஆனால், அரசியலில் எந்தப் பங்கும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். கட்சியில் சாதாரண உறுப்பினர். அதிலிருந்து கூட இரண்டு முறை நீக்கப்பட்டு, மன்னிப்புக் கோரிய பிறகு சசிகலாவை சேர்த்துக் கொண்டார். அதுவும், தன் குடும்பத்துடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன் என்றும் உறுதியளித்திருந்தார் என ராம் தெரிவித்தார்.

சசிகலாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும், அதை நம்பி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால், அது பேரழிவான ஓர் ஏற்பாடாகக்கூட முடியலாம் என்று என். ராம் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவு முன்பே தெரிந்துவிட்டது

ஜெயலலிதாவின் உயிர் பிரிந்துவிட்டது என்பது ஏற்கெனவே தெரிந்துவிட்டது. அவரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி பலனளிக்காது என்று உறுதியாகிவிட்டது. அதனால், புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை முன்னதாகவே தொடங்கிவிட்டார்கள் என என். ராம் கூறினார்.

இதில் ஒரு வெளிப்படைத் தன்மை இல்லாவிட்டாலும் கூட, அந்த ஏற்பாடு தெளிவான ஏற்பாடுதான் என்று ராம் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், பல்வேறு முடிவுகளை எடுப்பதில், மத்திய அரசு தலையிட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் என். ராம் கருத்துத் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்