500 கிலோ எடை கொண்ட எகிப்திய பெண்ணுக்கு இந்தியாவில் அறுவை சிகிச்சை

உலகில் அதிக எடை கொண்ட பெண்மணி என்று கருதப்படும் 500 கிலோ எடை கொண்ட ஒரு எகிப்திய பெண்மணி விரைவில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்காக இந்தியா கொண்டுவரப்படவுள்ளார்.

படத்தின் காப்புரிமை COURTESY: DR MUFFAZAL LAKDAWALA

மும்பையில் உள்ள உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சை மருத்துவரான (bariatric surgeon) முஃபாசல் லக்டாவாலா 36 வயதான எமான் அஹமத் அப் எல் ஆதிக்கு சிகிச்சை அளிக்கவுள்ளார். இதற்காக எமான் எகிப்த் நாட்டில் இருந்து மும்பை வரவுள்ளார்.

எமான் தனியாக பயணம் செய்ய முடியாத காரணத்தால், கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகம் முதலில் அவருக்கு விசா கொடுக்க மறுத்தது.

மருத்துவர் முஃபாசல் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ட்விட்டர் மூலம் தகவல் அளித்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் உடனடியாக பதில் தந்ததும், அந்த நிலை மாறியது.

எமான் முடங்கிப் போனதற்கான காரணம்

அதிக உடல் எடை காரணமாக, கடந்த 25 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் எமான் சிரமப்படுவதாகவும், அவரது உடல் எடை தற்போது 500 கிலோவாக உள்ளது என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள தகவல் உண்மை என்றால், தற்போது அவர்தான் உலகின் அதிக எடை கொண்ட பெண்மணி ஆவார்.

இதுவரை அதிக உடல் எடை கொண்ட பெண்ணாக கின்னஸ் சாதனை புத்தகப் படி நம்பப்படும் பாலின் பாட்டர் என்பவரின் எடை 292 கிலோ ஆகும்.

எமானின் மருத்துவ அறிக்கை மற்றும் புகைப்படங்களை பார்க்கும் போது, அவரின் எடை குறைந்த பட்சமாக 450 கிலோவாக இருக்கும் என்று தான் நம்புவதாக மருத்துவர் முஃபாசல் பிபிசியிடம் கூறினார். அவர், இந்தியாவின் மத்திய அரசு அமைச்சர்களான நிதின் கட்கரி மற்றும் வெங்கய நாயுடு ஆகியோருக்கு உடல் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை COURTESY: DR MUFFAZAL LAKDAWALA

எமான் பிறந்த போது அவரின் எடை ஐந்து கிலோவாக இருந்தது என்றும் அவருக்கு யானைக்கால் வியாதி இருப்பதாகக் கண்டறியப்பட்டது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாக மருத்துவர் முஃபாசல் பிபிசியிடம் கூறினார். அந்த நிலையில், தொற்று நோய் பரவல் காரணமாக அவரின் மூட்டு அல்லது மற்ற உடல் பாகங்கள் வீக்கமடைந்தன என்று மும்பையில் உள்ள மருத்துவர் மு ஃபாசல் தொலைப்பேசி வாயிலாக பிபிசியிடம் தெரிவித்தார்.

எமன் 11 வயதாக இருந்த போது, அவர் அதிக எடை கொண்டவராக மாறினார்.. அதனால், அவர் எழுந்து நிற்க முடியாத நிலையில் தவிழ்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின், அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இது அவரைப் படுக்கையில் முடக்கியது. இதனால் அவர் வீட்டில் இருந்து எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது என்று அவரின் குடும்பத்தினர் கூறினார், '' என்றார் மருத்துவர் முஃபாசல்.

எமானின் தாய் மற்றும் அவரது சகோதரி அவரை கவனித்து வருகின்றனர்.

எமானின் வருகை எதிர்நோக்கும் மருத்துவர்

முதலில் எமானின் சகோதரி, அக்டோபர் மாதம் தன்னை தொடர்பு கொண்டார் என்றும் எமனை ஒரு தனி விமானத்தில் அழைத்து வரும் அளவிற்கு அவரது குடும்பத்திடம் பணம் இல்லாத ஏழ்மை நிலையில் உள்ளதால் தான் பணம் சேர்க்க தொடங்கியதாக மருத்துவர் முஃபாசல் கூறினார்.

''முறைப்படி அவரை மும்பைக்கு கொண்டு வருவதற்காக வேலைகள் முடிந்தவுடன் அடுத்த வாரம் அவர் இங்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார் முஃபாசல்

எமன் அஹமத் அப் எல் தாவிவுக்கு யானைக்கால் வியாதி இருப்பதாகத் தான் நம்பவில்லை என்றும் அவர் உடல் பருமன் தொடர்பான லிம்போஃ டீமா(lymphoedema)என்ற கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக தான் அவரது கால்கள் வீங்கியுள்ளன என்கிறார் மருத்துவர் லக்டவாலா.

''உடல் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சைக்காக அவர் மும்பையில் இரண்டு அல்லது மூன்று மாத காலம் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும். அதன் பின் அவர் வீடு திரும்பலாம். ஆனால் அவரது உடல் எடை 100 கிலோவிற்கும் குறைவாக மாற இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும்,'' என்றார் அவர்.

''என்னால் அவருக்கு உதவ முடியும் என்று நான் நம்பிக்கையோடு உள்ளேன். நான் உறுதியோடு இருக்கிறேன் என்று சொல்ல முடியாது ஏனெனில் அது மிகைப்படுத்திய செயலாக இருக்கும்,'' என்றார்.

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்றால் என்ன?

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை (Bariatric surgery) என்று அறியப்படும் உடல் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை என்பது அதிக எடையுடன், பருமனான ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கும் போது கடைசி நடவடிக்கையாக செய்யப்படும்.

ஐக்கிய ராஜ்யத்தில், இந்த வகை அறுவை சிகிச்சை, தேசிய சுகாதார சேவைகள் மூலம் அளிக்கப்படுகிறது. அதிலும்கூட, பிற சிகிச்சைகள் பலன் அளிக்காத நிலையில், உயிரைப் பாதிக்க கூடிய சாத்தியம் உள்ள சமயத்தில் தான் செய்யப்படும்.

ஐக்கிய ராஜ்யத்தில், ஒவ்வொரு ஆண்டும், சுமார் 8,000 பேருக்கு இந்த அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பொதுவாக உடல் டை குறைப்பு அறுவை சிகிச்சையில் இரண்டு வகைகள் உள்ளன:

இரைப்பையின் அளவை குறைப்பது ஒரு வகை. இதில் இரைப்பையின் அளவு ஒரு பட்டை மூலம் கட்டப்பட்டு சுருக்கப்பட்ட காரணத்தால், ஒருவர் சாதாரணமாக உண்ணும் அளவை விடக் குறைந்த அளவில் உணவு எடுத்துக்கொள்ளும் போது, இரைப்பை நிரம்பிவிட்ட உணர்வை கொடுக்கும்.

இரைப்பை மாற்று வழி அறுவை சிகிச்சை (Gastric bypass)இரண்டாவது வகை. இதில் செரிமான அமைப்பில் செய்யப்படும் மாற்றம் காரணமாக குறைவான உணவு செரிமானம் ஆகும். இதனால் ஒருவர் குறைந்த அளவு உணவு உண்ட போதே அவருக்கு இரைப்பை நிரம்பிய உணர்வு ஏற்படும்.