'வர்தா' புயல் எதிரொலி: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு நாளை விடுமுறை

'வர்தா' புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு நாளை (திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை IMD Weather Twitter
Image caption வங்க கடலில் தீவிரம் கொண்டுள்ள வர்தா புயல்

மேலும் இந்த 3 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க அல்லது ஊழியர்களை வீட்டிலிருந்த படியே பணிபுரிய வைக்க கூறி தமிழக அரசு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்புகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர தாலுக்கா பகுதிகளுக்கும் பொருந்தும் என தமிழக அரசு கூறியுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் அதி தீவிர புயலான வர்தா, நாளை (திங்கள்கிழமை) சென்னைக்கு மிக அருகே கரையை கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு புயலின் விளைவாக சென்னை உள்ளிட்ட தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகப்பகுதிகளில், கன அல்லது மிக கனத்த மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் மிகவும் கனத்த மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption (கோப்புப் படம்)

இந்த புயல் எச்சரிக்கை தொடர்பான அவசர கூட்டம் ஒன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, நிலைமையை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகரிகள் நியமிக்கப்பட்டு உத்தரவு வெளியானது.

இந்நிலையில், பலத்த காற்று வீசும் சமயங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் எனவும், நிலைமை மோசமடையும் சூழலில் அதை சமாளிக்க எதுவாக தமிழகத்தின் மற்ற 5 மாவட்டங்களிலிருந்து மின்துறை ஊழியர்கள் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மரங்கள் வெட்ட பயன்படுத்தப்படும் நவீன கருவிகள், தேங்கும் நீரை வெளியேற்ற பயன்படும் சக்தி வாய்ந்த மோட்டார் பம்புகள், மோட்டார் பொருத்தப்பட்ட படகுகள், பொது மக்களை தங்க வைக்கும் பாதுக்காப்பு முகாம்கள், பேரிடர் மீட்புக்குழு போன்றவை தயார் நிலையில் உள்ளதாக தமிழக அறிவித்துள்ளது.

மேலும் தேவைப்படும் பட்சத்தில், ராணுவ உதவியை பெற்றும் மீட்பு பணிகள் தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனால், பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறியுள்ள தமிழக அரசு, மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான அறிவுரைகளையும் வழங்கியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்