கரையை கடக்கத் தொடங்கியது : மாலை 6 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயலான வர்தா, இன்று (திங்கள்கிழமை) பகல் 2 மணிக்கு சென்னைக்கு மிக அருகே கரையை கடக்கத் தொடங்கியதாகவும், மாலை 6 மணிக்கு இது முழுவதுமாக கரையை கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Image caption 'வர்தா' புயலின் சீற்றம்

சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இந்த புயல் 90 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வரை வீசக் கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடும் புயலின் எதிரொலியாக, பொது மக்கள் யாரும் மதியம் 1 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Image caption வர்தா புயலால் வேரோடு சாய்ந்த மரங்கள்

சென்னையில் பல முக்கிய சாலைகளிலும் வர்தா புயலால் வேரோடு சாய்ந்த மரங்களை போர்க் கால அடிப்படையில் தீயணைப்புப் படையினர் சரி செய்து வருகின்றனர்.

முன்னதாக, 'வர்தா' புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்று (திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை PTI
Image caption வர்தா புயல்: மாலை 6 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

மேலும் இந்த 3 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க அல்லது ஊழியர்களை வீட்டிலிருந்த படியே பணிபுரிய வைக்க கூறி தமிழக அரசு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்புகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர தாலுக்கா பகுதிகளுக்கும் பொருந்தும் என தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும், சென்னையில் மாலை ஆறு மணி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புறநகர் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்