சென்னையில் புறநகர் ரெயில் சேவையை தொடங்குவதில் தாமதம்

Image caption வர்தா புயலால் சென்னையில் புறநகர் ரெயில் சேவைகள் ரத்து

வர்தா புயலால் நேற்று (திங்கள்கிழமை) சென்னையில் திங்கள்கிழமை புறநகர் மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னமும் அவை தொடங்கப்படவில்லை.

சென்னையில் புறநகர் ரெயில் சேவை மற்றும் பறக்கும் ரெயில் சேவை தொடங்குவதில் சற்று கால தாமதம் ஏற்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை நகரின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. மின்சாரம் கிடைத்த பின்னர், புறநகர் மின்சார ரெயில் சேவை என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

அதே வேளையில், திங்கள்கிழமை சென்னையில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை விமான சேவைகள் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை IMRAN QURESHI
Image caption கடும் பாதிப்பை ஏற்படுத்திய வர்தா புயல்

பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வர்தா புயலால், திங்கள்கிழமை காலை முதலே, சென்னை. காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல தொலைபேசி இணைப்புகள், மற்றும் கைபேசிகள் ஆகியவை செயலிழந்தன.

சென்னையில் பல முக்கிய சாலைகளிலும் வர்தா புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வர்தா புயலின் சீற்றத்தால் விழுந்த மரம்

இதனிடையே, சென்னை , காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும், புயலால் ஏற்பட்ட தாக்கம் குறித்து தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தமிழக முதலைமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

''சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 97 மையங்களில் 10, 432 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்'' என்று முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கியிருந்தவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கேட்டறிந்தார்.

நேற்று மாலை மற்றும் இரவிலும், சென்னையில் பல இடங்களிலும் மரங்கள் விழுந்துள்ளதால் ,அவற்றை முழுமையாக அப்பறப்படுத்தும் பணி இன்று நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, சென்னை துறைமுகத்தில் இருந்து மேற்கு திசை நோக்கி சென்ற வர்தா புயலால் பெங்களூருவில் இரவு முழுவதும் கன மழை பெய்தது.

தொடர்புடைய தலைப்புகள்