திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக திமுக தலைவர் மு. கருணாநிதி, இன்றிரவு ( வியாழக்கிழமை) மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதனால், அவரைப் பார்க்க வருவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது.

அதற்கு பிறகு, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதியன்று, ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்துக் குறைவுக்காக கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், கடந்த டிசம்பர் 7-ஆம் தேதியன்று, உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்.

டிசம்பர் 7-ஆம் தேதியன்று, காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் ஊட்டச்சத்து மற்றும் நீர்சத்து உதவிக்காக அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் ஆரோக்கியத்தில் கணிசமான அளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல் நலம் சீரான நிலையை எட்டிவிட்டது என்றும் உயிர்வேதியியல் அளவைகள் வழமைக்கு வந்துவிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, வீட்டில் ஒய்வு எடுத்த வந்த திமுக தலைவர் கருணாநிதி, சென்னையில் நிலவும் குளிர் காரணமாக, சளித் தொல்லையால் அவதிப்பட்டதாகவும், அதனால் இன்றிரவு ( வியாழக்கிழமை) அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதி தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும். அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்