கருணாநிதியைப் பார்க்க வந்த வைகோ கார் மீது தாக்குதல்: திமுக வருத்தம்

உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் கருணாநிதியை நலம் விசாரிப்பதற்காக சென்ற வைகோவுக்கு தி.மு.க. தொண்டர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர் திரும்பிச் சென்றார். அவர் வந்த கார் மீது செருப்புகளும் வீசப்பட்டன.

சனிக்கிழமையன்று இரவு 7.45 மணியளவில் வைகோ கருணாநிதியை பார்ப்பதற்காக அவர் சேர்க்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

ஆனால், அங்கு கூடியிருந்த தி.மு.க. தொண்டர்கள் மருத்துவமனையின் வாயிலை மறைத்து, வைகோவுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். மேலும் வைகோவுடன் வந்த தொண்டர்களும் தி.மு.க. தொண்டர்களும் மோதும் சூழலும் ஏற்பட்டது.

இதையடுத்து தான் திரும்பிச் செல்வதாகக் கூறிய வைகோ, காரில் அமர்ந்த பிறகு, அவரது கார் மீது செருப்பு வீசப்பட்டது. கற்களையும் மரக்கட்டைகளையும்கூட அவரது வாகனங்களின் மீது தி.மு.க. தொண்டர்கள் வீசினர்.

இதையடுத்து அவரது வாகனத் தொகுதி மருத்துவமனையிலிருந்து திரும்பிச் சென்றது. அப்போது மிகச் சிறிய அளவிலேயே காவல்துறையினர் அங்கு கூடியிருந்தனர்.

திமுக வருத்தம்

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனும் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவும் நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

"அவர் வரும் தகவல் அறிந்து நாங்கள் வருவதற்குள் இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துவிட்டது. மு.க. ஸ்டாலின் இதையறிந்து கடிந்துகொண்டார். இது குறித்து நாங்கள் வருந்துகிறோம்" என அவர்கள் கூறினர்.

இதற்குப் பிறகு ஊடகம் ஒன்றிடம் பேசிய ம.தி.மு.க தலைவர்களில் ஒருவரான மல்லை சத்யா, இது திட்டமிட்ட தாக்குதல் என்றும் தி.மு.கவின் வருத்தத்தை ஏற்க முடியாது என்றும் கூறினார்.

தொடர்புடைய தலைப்புகள்