நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

இந்தியாவில் நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் நிரந்தர நதிநீர் நடுவர் மன்றத்தை அமைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு கூறியிருக்கிறது.இந்நிலையில், நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தடையாக இருக்கக் கூடாது என, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நிரந்தர நதிநீர் நடுவர் மன்றம் குறித்த அறிவிப்பை தில்லியில் வெளியிட்ட நீர்வளத்துறை செயலாளர் சசி சேகர், "ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நிரந்தர நடுவர் மன்றம் அமைக்கப்படும். அதன் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு நதிநீர் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு தனித்தனி அமர்வுகள் ஏற்படுத்தப்படும். குறிப்பிட்ட நதிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன் அதற்கான அமர்வு கலைக்கப்படும். இதன்மூலம் ஒவ்வொரு நதிநீர் பிரச்சினையும் இரு ஆண்டுகளில் தீர்க்கப்படும். இதற்கான சட்ட மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்'என்று தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, தற்போது நடைமுறையில் இருக்கும் காவிரி நடுவர் மன்றம் உள்ளிட்ட 8 நடுவர் மன்றங்களும் இந்த புதிய அமைப்புடன் இணைக்கப்பட்டு விடும் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மத்திய அரசின் இந்த திட்டம் எந்த வகையிலும் பயனளிக்காது, காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதை தாமதப்படுத்தும் நோக்கம் தான் நிரந்தர நடுவர் மன்றத் திட்டம் என பாட்டாளி மக்கள் கட்சி குற்றச்சாட்டியுள்ளது. .

நிரந்தர நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால் அனைத்து நதி நீர் பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு கிடைக்கும் என்பது மாயையே தவிர, சாத்தியம் அல்ல என அன்புமணி கூறியுள்ளார்.

இப்போது இருக்கின்ற 8 நடுவர் மன்றங்களில் கோதாவரி, கிருஷ்ணா, நர்மதா ஆகிய 3 நடுவர் மன்றங்கள் 48 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1969 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டவை ஆகும். அனைத்தும் பல ஆண்டுகள் அனுபவம் மிக்கவை. 6 முதல் 48 ஆண்டுகளாக விசாரித்தும் நடுவர் மன்றங்களால் தீர்வு காண முடியாத நிலையில், நடுவர் மன்ற அமர்வுகள் இரு ஆண்டுகளில் நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் என்பது கனவாகவே அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்..

மேலும், காவிரி நடுவர் மன்றத்திற்கு தலைவர்களாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகளுமே பணியில் இருந்தவர்கள். அவர்களால் நதிநீர் பிரச்சினைகளுக்கு குறிப்பிட்ட காலவரைக்குள் தீர்வு காண முடியவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், மத்திய அரசு அமைக்க திட்டமிட்டுள்ள நிரந்தர நடுவர் மன்றமும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் செயல்படும்.

அதற்கு கீழ் அமைக்கப்படும் அமர்வுகள் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலோ அல்லது வல்லுநர்கள் தலைமையிலோ தான் செயல்பட வேண்டியிருக்கும். அத்தகைய அமர்வுகளால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு சொல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், நிரந்தர நடுவர் மன்ற அமர்வுகளின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால், அத்தீர்ப்புகள் செல்லாது என அறிவிக்கப்படலாம். அதனால் நேரமும், பொருளாதாரமும் தான் வீணடிக்கப்படுமே தவிர எந்தவித பயனும், தீர்வும் ஏற்படாது என கருத்து வெளியிட்டுள்ளார்.

இதற்கெல்லாம் மேலாக, நடுவர் மன்றத் தீர்ப்புகளை செயல்படுத்தும் அதிகாரமும் புதிய அமைப்புக்கே வழங்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்படி ஓர் அதிகாரம் வழங்கப்பட்டால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை இந்த அமைப்பே செயல்படுத்தும் என்று கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு முட்டுக்கட்டைப் போடும் வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது.

நிரந்தர நடுவர் மன்றம் அமைக்கும் திட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது அல்ல. 2012 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தேசிய நீர்க் கொள்கையிலேயே இப்படி ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதே இந்த திட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அதே நிலைப்பாட்டைத் தான் இப்போதும் வலியுறுத்துகிறது.

எனவே, காவிரி சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு தடையாகவும், மற்ற நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை தாமதப்படுத்தக்கூடிய சக்தியாகவும் அமையக்கூடிய நதிநீர் பிரச்சினைகளுக்கான நிரந்தர நடுவர் மன்றம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்