இந்தியாவில் போலீஸ் காவலில் நூற்றுக்கணக்கானோர் மரணம்: மனித உரிமை அமைப்பு அறிக்கை

படத்தின் காப்புரிமை AFP
Image caption தொடரும் மனித உரிமை மீறல்கள் (கோப்புப்படம்)

இந்தியாவில், கடந்த 2010 முதல் 2015-ஆம் ஆண்டு வரை, போலீஸ் காவலில் 600 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்காவை மையமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கைதிகள் மரணம் தொடர்பாக போலீசார் யாரும் தண்டிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது.

காவல் மரணங்கள் தொடர்பாக காரணம் கூறும் காவல் துறையினர், கைதிகளின் உடல்நலக்குறைவு, தப்ப முயற்சி, தற்கொலை மற்றும் விபத்து ஆகிய காரணங்களைத்தான் வழக்கமாகக் கூறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

ஆனால், காவலில் துன்புறுத்தல் காரணமாகவே அதுபோன்ற மரணங்கள் நிகழ்வதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption உயிருக்கு உத்தரவாதமில்லை

திங்கள்கிழமை எச்ஆர்டபுள்யு வெளியிட்ட, "கைது நடவடிக்கை விதிகளை உதாசீனப்படுத்தம் காவல்துறை, துன்புறுத்தலால் காவல் மரணங்கள், காரணமானவர்களுக்கு பாதுகாப்பு", என்ற தலைப்பில் 114 பக்க அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2009 முதல் 2015-ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த 17 காவல் மரணங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆழமான விசாரணை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், சாட்சிகள், நீதித்துறை ஆய்வாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

லாக்கப் மரணங்களை விவரிக்கும் `விசாரணை' திரைப்படம் குறித்த செய்தி :

ஆஸ்கர் களத்தில் இந்தியாவிலிருந்து இயக்குநர் வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம்

அந்த 17 சம்பவங்களிலும், போலீசார் முறையான கைது நடவடிக்கைகளைக் கையாளவில்லை என்றும், சந்தேகத்துக்குரிய நபரை மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக வழிவகுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துன்புறுத்தல்களுக்காக, போலீஸ் அதிகாரிகள் தண்டிக்கப்படும்போதுதான், வாக்குமூலம் பெறுவதற்கு முறையற்ற வழிகளைக் கையாண்டு, சந்தேக நபர்களைத் தாக்கும் இந்திய போலீசார் பாடம் கற்றுக் கொள்வார்கள்" என்று தெரிவித்தார் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் தெற்காசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி.

"காவல் மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரிகள், தங்களது சக போலீஸ் அதிகாரிகளைக் காப்பாற்றுவதில்தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர, அவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை "

Image caption மறுக்கப்படும் விதிமுறைகள்!

கைது செய்யப்படும் ஒருவர், மருத்துவப் பரிசோதனை முடித்து 24 மணி நேரத்துக்குள் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் சட்ட விதி.

கடந்த 2015-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 97 மரணங்களில் 67 மரணங்கள், 24 மணி நேரத்துக்குள் சந்தேக நபர் உயிரிழந்ததால் அல்லது 24 மணி நேரத்துக்குள் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தாத காரணத்தால் ஏற்பட்டவை என்று அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்திருப்பதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.

தவறிழைக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது நடத்தப்படும் விசாரணையில் அவர்களைப் பொறுப்பாக்குவது அரிதான விடயம் என்றும், அவ்வாறு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக புகார் செய்யப்படுவதை தாமதப்படுத்துவதிலோ அல்லது தடுப்பதிலோதான் கவனம் செலுத்துவதாக மனித உரிமை அமைப்பு கூறுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்