தமிழக தலைமைச் செயலர் வீட்டில் நடந்த சோதனைக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் இல்லத்தில், வருமான வரித் துறை சோதனை நடத்திவருவதற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தமிழக தலைமைச் செயலர் வீட்டில் நடந்த சோதனைக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் அவர், முன்பு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது; தற்போது தமிழக தலைமைச் செயலர் இல்லத்தில் நடத்தப்படுகிறது. இந்த பழிவாங்கும், நெறிமுறையற்ற நடவடிக்கை, கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்கும் என்று கூறியிருக்கிறார்.

மேலும், அமித் ஷா போன்றவர்களின் இல்லத்தில் சோதனை நடத்தப்படாதது ஏன் என்றும், இம்மாதிரியான நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பாக மாநில அரசுடன் கலந்து பேசி, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிய பிறகே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் மம்தா கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் சோதனை நடக்கும் சில இடங்களில் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராம மோகன ராவின் அண்ணா நகர் வீட்டில் சோதனை நடந்துவரும்போது, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த செந்தில் என்பவர் பிரதமர் மோதிக்கு எதிராகவும் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பிவந்தார். அவரை திடீரென சிலர் தாக்கினர்.

தொடர்புடைய தலைப்புகள்