தமிழகத்தில் வருமான வரி சோதனை: மம்தாவின் கருத்தை எதிர்க்கும் தமிழிசை

தமிழக தலைமைச் செயலர் ராம மோகன ராவின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது தொடர்பாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட கருத்துக்கு, பாஜகவின் தமிழக செயலாளர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER

தமிழக தலைமைச் செயலர் ராம மோகன ராவின் இல்லம் மற்றும் தலைமைச் செயலகத்தில் அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் இன்று (புதன்கிழமை) வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சோதனைகளைப் பற்றி தனது ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ''டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலர் மீதும் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏன் இந்த பழிவாங்கும் நடவடிக்கை? இது கூட்டாட்சி அமைப்பை குலைப்பதாக உள்ளது. பணம் வசூலித்துக்கொண்டிருக்கும் அமித் ஷா மற்றும் பிறர் மீது ஏன் சோதனை நடவடிக்கை எடுக்கக்கூடாது?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER

மம்தாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜகவின் மாநில செயலாளர் தமிழிசை சௌந்தரராஜன், பிபிசி தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில், '' இது போன்ற கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு மம்தா வருத்தப்படவேண்டும். அவர் தன்னை ஊழலுக்கு எதிரானவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வருமான வரி துறையினர் சோதனை நடத்துவதை எதிர்ப்பது நியாயமல்ல'' என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,''வருமான வரி துறையினர் தகுந்த ஆதாரம் இல்லாமல் இவ்வாறான ஒரு சோதனையை செய்ய முடியாது. சில தினங்களுக்கு முன்பு, சேகர் ரெட்டி என்பவரின் வீட்டில் நடந்த சோதனையில் பல கோடி ரூபாய் மற்றும் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் ஒப்பந்த திட்டங்களுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பெற்றுள்ளதாகத் தகவல் உள்ளது. அவருக்கு தலைமை செயலருடன் தொடர்பு உள்ளது. அதற்கான ஆதாரத்தை வைத்து தான் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்,'' என்றார்.