அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் நியமனங்களை ரத்து செய்தது நீதிமன்றம்

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் உறுப்பினர் நியமனங்களை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணய உறுப்பினர் நியமனங்களை ரத்து செய்தது நீதிமன்றம்

தமிழ்நாடு அரசின் பணியாளர்களைத் தேர்வு செய்யும் அமைப்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இயங்கி வருகிறது. இந்தத் தேர்வாணயத்திற்கு 11 உறுப்பினர்களை கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதியன்று தமிழக அரசு நியமித்தது.

ஆர். பிரதாப் குமார், வி. சுப்பைய்யா, எஸ். முத்துராஜ், எம். சேதுராமன், ஏ.வி. பாலுசாமி, எம். மாடசாமி, வி. ராமமூர்த்தி, பி. கிருஷ்ணகுமார், ஏ. சுப்பிரமணியன், என்.பி. புண்ணியமூர்த்தி, எம். ராஜாராம் ஆகிய பதினொரு பேரை தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நியமித்தார்.

இந்த நியமனங்களை எதிர்த்து, தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர்.

தகுதியில்லாதவர்கள், அரசியல்சார்பு உள்ளவர்கள் இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தங்களது மனுக்களில் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்கே கவுல் மற்றும் மகாதேவன் அடங்கிய அமர்வு, தகுதியை கணக்கில் கொள்ளாமல் செய்யப்பட்ட இந்த நியமனங்கள் செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்