கிரிஜா வைத்தியநாதனுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் பொறுப்பு தர முன்னாள் ஐ.ஏ.ஸ் அதிகாரி எதிர்ப்பு

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநாதனிடம் லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் பொறுப்பும் இருப்பது அவரது வேலையை சிக்கலாக்கும் என முன்னாள் ஐ.ஏ.ஸ் அதிகாரி தேவசகாயம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP

தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவின் வீட்டிலும், தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைக்குப் பிறகு, அவருக்கு பதிலாக புதிய தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் வியாழக் கிழமை நியமிக்கப்பட்டார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் ஐ.ஏ.ஸ் அதிகாரி தேவசகாயம், ''தலைமை செயலாளர் என்ற பதவியும், லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமை அதிகாரியாகவும் ஒரே அதிகாரி செயல்படுத்துவது பெரிய பிரச்சனை. மாநிலத்தின் தலைமை செயலாளர் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளை ஒருங்கிணைத்து, வழிநடத்த வேண்டியவர். அதே அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தலைமை வகித்தால், பல முரண்பாடுகள் ஏற்படும்,'' என்றார்.

இதற்கு முன்பு தலைமை செயலர் பதவியில் இருந்த ராம மோகன ராவ், அவருக்கு முன்பு பணியாற்றிய ஞானதேசிகன் ஆகியோர் சென்ற அதே வழியில் கிரிஜா செல்லக்கூடாது என்றார்.

''பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள பல அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் இணைந்து ஊழலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பற்றி முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. இவற்றை விசாரிக்க தனி பொறுப்பில் ஓர் அதிகாரி உடனடியாக நியமிக்கப்படவேண்டும்,'' என்றார் தேவசகாயம்.

கிரிஜா வைத்தியநாதன்: முக்கிய தகவல்கள்

''இதற்கு முன்பு நம்பியார் என்ற தலைமை செயலாளர் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமைப் பொறுப்புக்கு பொறுப்பு தனக்கு வேண்டாம் என்று கூறினார். அது போல கிரிஜாவும் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை பதவிக்கு நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும்,'' என்றார் தேவசகாயம்.

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்