சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுக்கள் யாருக்கு வந்தவை? மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுக்கள், தமிழக அரசின் கருவூலங்களுக்கு வந்தவையா, ஆட்சியாளர்களின் பழைய ரூபாய் நோட்டுகள் இதன் மூலம் மாற்றப்பட்டிருக்கிறதா என்பது குறித்து முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளிக்க வேண்டுமென தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தலைமைச் செயலாளரின் வீட்டில் நடந்த சோதனையின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலேயே சோதனை நடந்திருப்பதால், அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலகத்திற்கு இருந்த மாண்பு சிதைந்துவிட்டதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

சென்னையில் ஏராளமான 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் பறிமுதல்

இந்த சோதனையின் போது மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்பு அளித்ததன் மூலம், தமிழக காவல்துறையின் மதிப்பு, மரியாதையையும் இந்த அதிமுக ஆட்சியில் சீர்குலைந்து விட்டது என்றும் இது குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எந்த கருத்தையும் தெரிவிக்காததும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ராம்மோகன ராவ் மீதான ரெய்டு குறித்த தகவல்கள் அனைத்தையும் மாநில அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இந்த ஊழலில் தொடர்புடைய "மேல்மட்ட" தலைவர்களும் எக்காரணத்தைக் கொண்டும் தப்ப விடக் கூடாது என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.