தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதி

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சனிக்கிழமையன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் நெஞ்சு வலிப்பதாகக் கூறி சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவர் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிவந்த ராம மோகன ராவின் இல்லம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம், அவரது மகனது வீடு, அலுவலகம், உறவினர்களின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பாக சோதனைகளை நடத்தினர்.

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

இந்த சோதனையில் சுமார் 30 லட்ச ரூபாய் ரொக்கமும் ஐந்து கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாகவும் அவரது மகன் விவேக் வீட்டில் இருந்து பணம், 10 கிலோ தங்கம், வைர நகைகள், பல கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்குப் பிறகு அவர் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக ராம மோகன ராவ் விசாரணைக்கு ஆஜராக வருமான வரித் துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில்தான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.