ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்பவர்களுக்கு விருது: மோதி அறிவிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தனது 'மன் கீ பாத்' என்ற நாட்டு மக்களுடன் வானொலியில் உரையாடும் நிகழ்ச்சியில் ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்யும் நுகர்வோருக்கு விருதுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption 'ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்யும் நுகர்வோருக்கு விருதுகள்'

இன்று (ஞாயிற்றுக்கிழமை) வானொலியில் உரையாற்றிய மோதி, ''ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்யும் நுகர்வோருக்கு இரண்டு விருதுகள் வழங்கும் திட்டங்கள் அறிமுகப்படுப்படுகின்றன. லக்கி கிரஹாக் யோஜனா (Lucky Grahak Yojana) திட்டம் மற்றும் டிஜி தன் வியாபார் யோஜனா (Digi Dhan Vyapar Yojana) மூலம் ஆகிய திட்டங்கள் மூலம் விருதளிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

இந்த திட்டம் குறித்து மேலும் பேசுகையில், '' இந்த திட்டங்கள் இன்று முதல் அமலாகிறது. 15 ஆயிரம் பேருக்கு தினமும் பரிசு வழங்கப்படும். வருமான வரியையும் மின்னணு முறையில் செலுத்தலாம். இந்தியாவை ரொக்கமில்லா நாடாக மாற்ற வேண்டும் என உங்களை வேண்டுகிறேன்'' என்று பிரதமர் மோதி கேட்டுக் கொண்டார்.

''தற்போது நாட்டில் நடந்து வரும் கறுப்பு பணத்திற்கு எதிரான போர், பொது மக்கள் ஒத்துழைப்புடன் வெற்றியடைந்துள்ளது. பொது மக்கள் தரும் தகவல் காரணமாக கறுப்பு பணம் பதுக்குவோர் தொடர்ச்சியாக சிக்கி வருகின்றனர். இது முடிவு அல்ல'' என்று மோதி கூறினார்.

மேலும், அவர் உரையாற்றுகையில் ''இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயின் சாதனையை யாரும் மறந்து விட முடியாது. அவர் , நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்'' என்று தெரிவித்த மோதி, நாட்டு மக்களுக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 4- 0 அன்று டெஸ்ட் தொடரை வென்றது குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோதி, இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது என்று தனது உரையில் தெரிவித்தார்.

மேலும், 15 ஆண்டுகளுக்கு பிறகு இளையோர் உலக கோப்பை ஹாக்கியில் வென்ற இந்திய அணிக்கும் மோதி தனது பாராட்டுக்களை தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்