இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகாரிகளின் அறைகளில் கையில்லாத ஆடைகள் அணியத்தடை

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கையில்லாத ஆடைகள் அணிவதற்கு தடை (கோப்புப் படம்)

கையில்லாத ஆடைகளை அணிந்து நாடாளுமன்றத்தில் அரசு அதிகாரிகள் அமரும் விசேட அறைகளில் பிரவேசிப்பதை தடை செய்ய இலங்கை நாடாளுமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதி கட்டளை அதிகாரி நரேந்திர பெர்னாந்து இது குறித்து நாடாளுமன்றத்தில் பணிப்புரியும் பணியாளர்களுக்கு மற்றும் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துக்கொள்ள வரும் அரசு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பாக விசேட குறியீடுகள் இருப்பதாக தெரிவித்த அவர், இதற்கமைய சம்பந்தப்பட அறிவித்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதன் படி பெண்கள் நாடாளுமன்ற விசேட அறைகளுக்கு பிரவேசிக்கும் போது சேலை மற்றும் நீண்ட கையுள்ள ஆடைகளை அணிவது அவசியமென்று அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை GOSL
Image caption இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகாரிகளின் அறைகளில் கையில்லாத ஆடைகள் அணிவதற்கு தடை

ஆண்கள் தேசிய உடை இல்லா விட்டால் நீண்ட கைகளை கொண்ட அடைகளை அணிவது அவசியமென்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அறிவித்தளொன்றை திடீரென பிறப்பிக்க நேரிட்ட காரணங்கள் குறித்து கேட்டபோது பதில் வழங்கிய நாடாளுமன்றத்தின் பிரதி கட்டளை அதிகாரி நரேந்திர பெர்னாந்து புதிய அரச அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற ஆடை குறியீடுகள் சம்பந்தமாக போதிய தெளிவு இல்லாதமை காரணமாக கடந்த காலத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இதனை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற மற்றும் அரசு அதிகாரிகளை தெளிவு படுத்தும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட அறிவித்தல் விடுக்கப்பட்டதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்