`தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தச் செல்லும் முன்னதாக வருமான வரித்துறை தமிழக அரசுக்குத் தெரிவித்திருக்க வேண்டும்'

Image caption பாலச்சந்திரன்

வருமான வரித்துறையினர் தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு சோதனை நடத்தச் சென்றபோது, மாநில அரசிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், "தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலரின் அலுவலகத்தில் சோதனை நடத்தச் சென்றபோது, சட்டத்துக்கு அப்பாற்பட்டு, மரபுகளின்படி, மாநில அரசுக்குச் சொல்லிவிட்டுத்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு சொன்னதாகத் தெரியவில்லை," என்றார்.

வருமானவரித்துறை சோதனை: மத்திய அரசு மீது ராம மோகன ராவ் பரபரப்பு குற்றச்சாட்டு

வருமான வரித்துறைக்கு இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் சோதனை நடத்தவும் அதிகாரம் உண்டு. மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம். அதனால், ராம மோகன ராவின் வீட்டுக்கு சோதனை நடத்தச் சென்றபோது கூட மாநில காவல் துறையை அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்றார்.

அதேபோல், ராம மோகன ராவின் வீட்டில் சோதனை நடந்தபோது, மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. அந்த அமைப்பைப் பொருத்தவரை, மத்திய பணியாளர்கள் மீது உள்ள கட்டுப்பாடு, மாநில பணியாளர்கள் மீது கிடையாது. அதனால், சோதனை நடந்த இடத்தில் புலனாய்வுத்துறை சென்றிருந்தால் அது தவறு என்றார் பாலச்சந்திரன்.

Image caption ராம மோகன ராவ்

இன்னும் தான் தலைமைச் செயலராக உள்ளதாக ராம மோகன ராவ் கூறுவதற்கு சட்டத்தில் இடமில்லை என்றார் பாலச்சந்திரன்.

"எந்த ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் நான் குறிப்பிட்ட தலைவரால் வளர்க்கப்பட்டேன் என்று சொல்வது மரபுக்கு உகந்ததல்ல. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எல்லாவித அரசியல் தலைவர்களுடனும் பணிபுரியக் கடமைப்பட்டவர்கள்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பழி வராமல் காப்பாற்றிக்கொள்ள பாஜகவுக்கு தெரியும் : குருமூர்த்தி

"ராம மோகன ராவைப் பொருத்தவரை, பேட்டி கொடுக்க உரிமை உண்டு. ஊடகங்களில் வந்த தகவல்களின்படி, அவர் வீட்டில் பல கோடி ரூபாய் பணமும், பல கிலோ தங்கக் கட்டியும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் உண்மை நிலையை விளக்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால், மக்கள் மன்றத்துக்குச் செல்வேன் என்று கூறுவதற்கு, அவர் அரசியல்வாதி அல்ல," என்றார் பாலச்சந்திரன்.

"வருமான வரித்துறையைப் பொருத்தவரை, தங்களிடம் உள்ள எல்லா ஆதாரங்களையும் வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீதிமன்றத்தில் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான், சோதனை நடத்துவதற்கான முகாந்திரம் இருந்ததா, இல்லையா என்பது தெரியும்," என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்