பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து அதிமுக சட்ட திட்ட விதி என்ன சொல்கிறது?

சென்னையில் நடந்த அதிமுக பொதுக் குழுக்கூட்டத்தில், அக்கட்சியின் புதிய பொதுச் செயலாளராகத் விகே. சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விதிகள் குறித்த தகவல்களை அக்கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் விளக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Image copyrightIMRAN QURESHI

இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதில் தீர்மானம் எண் 5, வி.கே. சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க ஆவண செய்த விதிகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது, ''முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைந்து விட்ட நிலையில், தற்போதுள்ள நிலையில் கழகத்தின் பொதுச் செயலாளர் நியமிக்கப்படுவது இன்றியமையாததாக உள்ளது. இதனை முடிவு செய்யும் அதிகாரத்தை அதிமுக சட்ட திட்ட விதி 19, பிரிவு -8 பொதுக்குழுவுக்கு முழுமையாக வழங்கியுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Image copyrightIMRAN QURESHI
Image caption அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா நியமனம்

சட்ட திட்ட விதி 20, பிரிவு -2 என்ன சொல்கிறது?

மேலும் அந்த தீர்மானத்தில், '' அதிமுக சட்ட திட்ட விதி 20, பிரிவு -2ன் படி, அதிமுக பொதுச் செயலாளர் தமிழகத்தில் உள்ள கட்சியின் கிளைகளின் அடிப்படை உறுப்பினர்கள் மற்றும் புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுடெல்லி, அந்தமான் போன்ற மாநிலக் கிளைகளின் உறுப்பினர்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளது.

''அவ்வாறு ஒருவர் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் வரை, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் வாழ்ந்து, அவரை கண்ணை இமை காப்பது போல் காத்த, அவரின் உடன் பிறவா சகோதரியாக விளங்கிய , தொண்டர்களால் 'சின்னம்மா' என்றழைக்கப்படும் திருமதி. வி. கே. சசிகலாவே கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்ற உகந்தவர் என்பதால், அவரை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க இந்த பொதுக்குழு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது'' என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''ஆகவே, அதிமுக சட்ட சட்ட திட்ட விதி 20, பிரிவு -2ல் கூறப்பட்டுள்ளபடி, கட்சிப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படும் வரை, வி.கே. சசிகலாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக நியமித்து இப்பொதுக்குழு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது' என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்