ஆடை, அலங்காரம்: ஜெயலலிதா பாணியில் சசிகலா

அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட சசிகலா, மறைந்த முதல்வரும் அவரது தோழியுமான ஜெயலலிதாவைப் போல தனது உடை மற்றும்சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார் என்பது பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AIADMK
Image caption நீளமான கையுடன் ரவிக்கை மற்றும் கொண்டை சிகை அலங்காரத்தில் சசிகலா

வியாழக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின், பச்சை வண்ண சேலையில் தோன்றிய சசிகலா காலர் மற்றும் கையை மறைக்கும் நீளமான ரவிக்கையில் தோன்றினார்.

படத்தின் காப்புரிமை AIADMK
Image caption தொண்டர்களுக்கு வணக்கம்

சனிக்கிழமையன்று அதிமுகவின் தலைமையகத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட தருணத்தில் ஜெயலலிதாவைப் போன்றே அவரது சிகை அலங்காரமும் செய்திருந்தார் என்று கருதப்படுகிறது.

ஜெயலலிதாவோடு பொது வெளியில் தோன்றிய தருணம் மற்றும் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த நேரம் வரை அவர் அணிந்திருந்த ஆடை மற்றும் சிகை அலங்காரத்துக்கும் தற்போதை தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை AIADMK
Image caption எப்போதும் கொண்டை சிகை அலங்காரத்துடன் இருக்கும் ஜெயலலிதா
படத்தின் காப்புரிமை AIADMK
Image caption காலர் மற்றும் நீளமான கையுடைய ரவிக்கையுடன்

சசிகலா இது நாள் வரை அணிந்திருந்த ரவிக்கை, அரைக் கை அளவு நீளம் மற்றும் அவரது சிகை அலங்காரம் சாதாரண பின்னல் முறையில் இருந்தது. கடந்த வாரம் முதல் அவரது தோற்றத்தில் மாற்றங்கள் வெளிப்பட ஆரம்பித்தன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த போது, அரைக் கை அளவு ரவிக்கை மற்றும் சாதாரண பின்னலுடன் சசிகலா

கழுத்தை மறைக்கும் வகையில் காலர் மற்றும் நீளமான கையுடன் கூடிய ரவிக்கைக்கு மாறியுள்ளார். ஜெயலலிதாவைப் போலவே கொண்டை அலங்காரம் செய்திருக்கிறார் என்பதை அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தள படங்கள் காட்டுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெயலலிதாவுடன் வாக்களித்த நேரத்தில்

ஏன் இந்த மாற்றம்?

சசிகலாவின் உடை மாற்றம் மற்றும் சிகை அலங்கார மாற்றம் மக்கள் மத்தியில் சென்று சேர செய்யப்பட்ட இயல்பான மாற்றங்கள் என்கிறார் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி. ''சசிகலா தற்போது ஒரு மாநிலத்தின் ஆளும் கட்சியின் தலைவர் என்ற ஒரு பொறுப்பை ஏற்றுள்ளார். அது மிகப் பெரிய பொறுப்பு. மக்கள் மத்தியில் தோன்றும் போது தோற்றம் மிக முக்கியம். அவர் தலைமை பொறுப்பு ஏற்கும் நிகழ்வில் அழகான தோற்றத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் வந்தார்,'' என்றார்.

ஜெயலலிதா ஆற்றிய உரைகளின் எதிரொலியாகத் தான் சசிகலாவின் பேச்சு இருந்தது என்றும் சரஸ்வதி குறிப்பிட்டார். ''ஜெயலலிதா மக்களால் நான், மக்களுக்காக நான் என்றார். அது போலவே, சசிகலாவும் அவரது உரையில், அதிமுக கழகத்தினர் கேட்டுக்கொண்டதற்காகத்தான் இந்தப் பணியை ஏற்பதாகவும், மக்களுக்காக உழைப்பதே தனது நோக்கம் என்றார். இது எங்களுக்கு மறைந்த முதல்வரைத்தான் ஞாபகப்படுத்துகிறது,'' என்றார்.

படத்தின் காப்புரிமை DIPR
படத்தின் காப்புரிமை AIADMK
Image caption புதிய பதவி, புதிய தோற்றம்

மக்கள் மனதைக் கவர முடியுமா?

இதற்கிடையில், சசிகலா தனது ஆடை மற்றும் சிகை அலங்காரத்தில் செய்துள்ள மாற்றங்களால் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் மனதில் இடம் பிடிப்பது சிரமம் தான் என்கிறார் எழுத்தாளர் வாஸந்தி. ''சசிகலா ஜெயலதாவின் தோழி என்று தான் இது நாள் வரை அறியப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் வீட்டில் அவருக்கு உதவியவர் என்ற தோற்றம்தான் இன்றும் மக்கள் மத்தியில் உள்ளது. வெறும் வெளித்தோற்றம் என்பது நடிப்பு என மக்கள் எண்ணுவார்கள் ,'' என்றார்.

ஜெயலலிதாவிற்கு இருந்தது போன்ற விசுவாச தொண்டர்கள் சசிகலாவிற்கு கிடைப்பது உறுதி இல்லை என்கிறார் வாஸந்தி. ''சசிகலா அரசியல் தளத்தில்செயல்பட்டது போல ஒரு தோற்றத்தை அவரது கட்சியினர் வலிந்து ஏற்படுத்துவது தெளிவாக தெரிகிறது,'' என்கிறார்.