அகிலேஷ் நீக்கத்தை ரத்து செய்தார் முலாயம் சிங்: 24 மணி நேரத்துக்குள் இணைந்த தந்தையும் மகனும்

உத்தர பிரதேச மாநில முதல்வரான அகிலேஷ் யாதவை சமாஜவாதி கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவித்த அடுத்த நாளே, கட்சியின் தலைவரும் அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங் யாதவ் அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

வெள்ளியன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவையும், ராம்கோபால் யாதவையும் கட்சியிலிருந்து 6 வருடங்களுக்கு நீக்குவதாகத் தெரிவித்தார்.

தனக்கு கட்சிதான் முக்கியம் என்றும், கட்சியை காப்பாற்றுவதே தன்னுடைய முதன்மை பணி என்றும் அகிலேஷ் தன்னிடம் எதையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக முலாயம் குற்றஞ்சாட்டினார்.

இன்னும் சில தினங்களில் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தன்னை கலந்து ஆலோசிக்காமல் அகிலேஷ் 235 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அறிவித்ததுடன் தனது ஆதரவாளர்கள் சிலரை நீக்கியதால் முலாயம் இந்த முடிவை எடுத்தார் என்று கூறப்பட்டது.

இந்த அறிவிப்பு விவாதத்தைக் கிளப்பியது.

திடீர் திருப்பமாக, அகிலேஷ் யாதவும் முலாயம் சிங் யாதவும் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமையன்று பங்கேற்ற சந்திப்பிற்கு பிறகு இந்த புதிய அறிவிப்பு வெளியாகியது.

கட்சியைப் பாதுகாப்பதற்காகத்தான் அகிலேஷை கட்சியில் இருந்து நீக்கியாதாக தெரிவித்த முலாயம் அவரை மீண்டும் கட்சியில் 24 மணி நேரத்திற்குள் இணைத்துக் கொண்டது சர்ச்சையாக மாறியுள்ளது .