கட்சியும் ஆட்சியும் வெவ்வேறு தலைமைகளிடம் இருப்பது ஏற்புடையதல்ல; சசிகலாதான் முதல்வராக வேண்டும் - தம்பிதுரை

ஆட்சித் தலைமை ஒருவரிடமும் கட்சித் தலைமை ஒருவரிடமும் இருப்பது கட்சிக்கும் மக்களுக்கும் ஏற்புடையதல்ல என்பதால், அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள சசிகலா, தமிழக முதலமைச்சராகவும் பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை @AIADMKOfficial

அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா பொறுப்பேற்று ஆற்றிய உரை அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது என தம்பிதுரை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியும், கோடான கோடி கட்சி தொண்டர்களும் என்ன ஆவார்கள் என்று கவலையடைந்திருந்த நிலையில் ஒரு கலங்கரை விளக்கம் போல் சசிகலா எங்களை காப்பாற்ற வந்துள்ளார்", என தம்பிதுரை குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை @AIADMKOfficial

"எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் தொடங்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்த சசிகலா தலைமை ஒன்றே சரியானது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது" என அவர் கூறியுள்ளார்.

"ஜெயலலிதா வழியில் சசிகலா செயல்படுவார் என்பதற்கு அவரின் பொதுச் செயலாளர் உரை சான்றாக இருந்தது" என்று தம்பிதுரை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆட்சித் தலைமை ஒருவரிடமும் கட்சித் தலைமை ஒருவரிடமும் இருப்பது கட்சிக்கும் மக்களுக்கு ஏற்புடையதல்ல. எனவே அதிமுக சிறப்புடன் செயல்பட்டு ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரைப் போல மக்களின் பேராதரவை பெற சசிகலா உடனடியாக தமிழக முதலைமைச்சராக ஆட்சித் தலைமையை ஏற்க வேண்டும் என்று அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்